ஜோடி தற்கொலை
பெங்களூரு புறநகர், பன்னரகட்டாவின், ஜனதா காலனியில் வசித்தவர்கள் பிரபு, 38, லட்சுமம்மா, 30. இவர்கள் திருமணம் செய்யாமல், சேர்ந்து வாழ்ந்தனர். சில நாட்களாக இவர்கள் வெளியே காணப்படவில்லை.
நேற்று காலை இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து வந்த போலீசார், உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
தொண்டர் மீது தாக்குதல்
தட்சிணகன்னடா லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் கேப்டன் பிரிஜேஷ் சவுடா வெற்றி பெற்றதால், பெல்தங்கடியின், களெஞ்சா கிராமத்தில் குஷலப்பா கவுடா என்பவரின் வீட்டு முன்பாக, பா.ஜ., தொண்டர்கள் நேற்று காலை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தன் வீட்டு முன்பாக பட்டாசு வெடித்ததால், கோபமடைந்த குஷலப்பா கவுடா, பா.ஜ., தொண்டர் ராஜேஷை அரிவாளால் தாக்கினார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இடி தாக்கி மூவர் பலி
ஹாசன், அரகலகூடின், தொட்டமக்கே கிராமத்தில் வசித்த முத்தம்மா, 70, புட்டம்மா, 60, நேற்று மாலை வயலில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால், மரத்தடியில் நின்றனர். இடி தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
விஜயபுரா, பபலேஸ்வராவின், காகன்டகி கிராமத்தில் வசித்த அமோகி சிவனகி, 38, நேற்று மாலை ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில், சிவனகியும், 20 ஆடுகளும் உயிரிழந்தன.
செக்யூரிட்டி தற்கொலை
மைசூரு, நஞ்சன்கூடின், கல்மள்ளி தொழிற் பகுதியில் உள்ள, தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணியாற்றியவர் நஞ்சேஷ், 40. சமீபத்தில் தொழிற்சாலையில் திருடு போனது.
இவர் மீது திருட்டு பழி விழுந்தது. இதனால் மனம் நொந்த இவர், நேற்று அதிகாலை, தொழிற்சாலை வளாகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.