ADDED : பிப் 26, 2025 02:14 AM
புதுடில்லி, 'கெயின் பிட்காயின்' கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக, நாடு முழுதும், 60 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கடந்த 2015ல், அமித் பரத்வாஜ் என்பவர், தன் சகோதரர் அஜய் பரத்வாஜ் உடன் இணைந்து, 'வேரியபிள் டெக் பிரைவட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை துவக்கினார்.
கெயின் பிட்காயின் என்ற பெயரில் கிரிப்டோகரன்சி திட்டத்தை இருவரும் துவக்கினர். இதில் முதலீடு செய்தால், மாதம் 10 சதவீதம் லாபம் தருவதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பி ஏராளமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர்.
சில மாதங்களுக்கு மட்டும், முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அளித்த இருவரும் 2017ல் பணத்தை திருப்பி அளிக்கவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதலீட்டாளர்கள், போலீசில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக, பஞ்சாப், டில்லி, மஹாராஷ்டிரா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையில் 6,600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது தெரிய வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட அமித் பரத்வாஜ் உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களின் வீடுகள், அலுவலகங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதன்படி, டில்லி, மும்பை, புனே, பெங்களூரு, சண்டிகர், சோலாப்பூர் உள்ளிட்ட நகரங்களில், 60 இடங்களில் சோதனை நடந்தது. இதில் பல முக்கிய குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

