சுங்க அதிகாரி குடும்பத்துடன் தற்கொலை? அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
சுங்க அதிகாரி குடும்பத்துடன் தற்கொலை? அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
ADDED : பிப் 22, 2025 03:35 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே பூட்டிய வீட்டில் சுங்கத்துறை கூடுதல் ஆணையர் மற்றும் அவரது தங்கை, தாய் உடல்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
கேரள மாநிலம் கொச்சி சுங்கத்துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றியவர், மணீஷ் விஜய், 42. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர்.
சந்தேகம்
கோழிக்கோட்டில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், கொச்சிக்கு மாறுதலாகி வந்தார்.
திருமணம் ஆகவில்லை. காக்கநாடு பகுதி யில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்தார். நான்கு மாதங்களுக்கு முன், மணீஷ் விஜயின் தாய் சகுந்தலா அகர்வால், 80, தங்கை ஷாலினி, 35, ஆகியோர் காக்கநாடு குடியிருப்புக்கு வந்தனர். 10 நாட்களுக்கு முன், மணீஷ் விஜய் ஒரு வார விடுமுறை எடுத்தார்.
சொந்த ஊர் செல்வதாக தெரிவித்திருந்தார். ஆனால், விடுமுறை முடிந்த பின்னரும் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை. போனில் அழைத்தபோது அது 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
சந்தேகம் அடைந்த ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு மணீஷின் குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. போலீசார் வந்து வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது, மணீஷ் விஜய் ஒரு அறையிலும், தங்கை ஷாலினி விஜய் வேறொரு அறையிலும் துாக்கில் இறந்த நிலையில் காணப்பட்டனர்.
விடுமுறை
மற்றொரு அறையில் கட்டிலில் போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் தாய் சகுந்தலா அகர்வால் உடல் காணப்பட்டது. அவரது உடலின் மேல் பூக்கள் வைக்கப்பட்டிருந்தன.
மூன்று உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டன. இதனால் அவர்கள் இறந்து ஆறு நாட்கள் ஆகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
தற்போது இந்த உடல்கள் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு சகோதரி வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் வந்த பின்னரே உடல் பரிசோதனை செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தாய் சகுந்தலா அகர்வாலுக்கு ஏராளமான நோய்கள் இருந்ததாகவும், அந்த மன வருத்தத்தில் மூவரும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், ஜார்க்கண்ட் மாநில தேர்வாணைய தேர்வில் முதல் ரேங்க் பெற்ற ஷாலினி விஜய், தேர்வில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட மன வருத்தத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

