ADDED : நவ 14, 2024 09:35 PM
பெங்களூரு; மாநிலம் முழுதும் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்கு, கர்நாடகாவில் சைபர் குற்றப்பிரிவு டி.ஜி.பி., நியமனம் செய்யப்பட உள்ளார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக, கர்நாடகாவில் சைபர் குற்றபிரிவுக்கென்று, தனி டி.ஜி.பி., நியமிக்கப்பட உள்ளார். முதன் முதலில், சைபர் கிரைம் போலீஸ் நிலையம் கர்நாடகாவில் அமைக்கப்பட்டது.
மாநிலம் முழுதும் நடக்கும் சைபர் குற்றங்களை தடுக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதிய டி.ஜி.பி., நியமிக்கப்பட உள்ளார்.
தற்போது, மாநிலத்தில் நான்கு டி.ஜி.பி.,க்கள் உள்ளனர். புதிதாக நியமிக்கப்பட உள்ள ஐந்தாவது டி.ஜி.பி., சைபர் கிரைம், சி.இ.என்., எனும் பொருளாதாரம் மற்றும் போதைப்பொருள் குற்றப்பிரிவை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்வார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சைபர் குற்றங்களை தடுக்க, சி.ஐ.டி., பிரிவுக்குள், சி.இ.என்., எனும் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டது. இப்பிரிவிற்கு, பிரணாப் மொஹந்தி ஏ.டி.ஜி.பி., தலைமை பொறுப்பேற்று வழிநடத்தினார்.
பெங்களூரில், நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில், 12,356 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. 1,242 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. 'முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 214 கோடி ரூபாய் அதிகம்' என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.