ADDED : ஆக 18, 2024 11:34 PM

கொப்பால்: சலுான் கடையில் நடந்த தகராறில், கத்தரிகோலால் குத்தி தலித் வாலிபர் கொலை செய்யப்பட்டார். கடை உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கொப்பால், யலபுர்கா சங்கனஹலா கிராமத்தில் வசித்தவர் யமனுார்சாமி பண்டிஹாலா, 27. தலித் சமூகத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, முதகப்பா, 45 என்பவர் நடத்தி வரும் சலுான் கடைக்கு முடிதிருத்த சென்றார். கடைக்கு சென்ற சிறிது நேரத்தில், முதகப்பாவுக்கும், யமனுார்சாமிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த முதகப்பா முடிதிருத்த பயன்படுத்தப்படும், கத்தரிகோலை எடுத்து, யமனுார்சாமியின் நெஞ்சில் பலமாக குத்தினார். ரத்தவெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். யலபுர்கா போலீசார் முதகப்பாவை கைது செய்தனர்.
விசாரணையில், முடி திருத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கொலை நடந்தது தெரிந்தது. ஆனால், யமனுார்சாமி தலித் என்பதால், அவருக்கு முடி திருத்த முதகப்பா மறுத்ததுடன், ஜாதியை சொல்லி திட்டி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுபற்றி முதகப்பாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

