தென்றல் தாலாட்ட, சாரல் துாவ பீமேஸ்வரா கோவிலில் தரிசனம்
தென்றல் தாலாட்ட, சாரல் துாவ பீமேஸ்வரா கோவிலில் தரிசனம்
ADDED : செப் 17, 2024 04:11 AM

செங்குத்தான மலை சரிவில், மரங்களால் சூழப்பட்ட பறவைகளின் கீச்சொலிகளை கேட்டு, இயற்கை அழகை ரசித்து கொண்டே பீமேஸ்வரா கோவிலுக்கு செல்வது சிறப்பு.
ஷிவமொகா மாவட்டம், சாகர் அருகில் பட்கல் - சித்தாபுரா - சொரபா சாலையில் உள்ள வனப்பகுதிக்கு இடையில் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் பாதை நம்மை வெகுவாக ஈர்க்கும். அதுவும் 50 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் பீமேஸ்வரா நீர்வீழ்ச்சியை கடந்து தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
ராட்சத பாறைகள்
இந்த அற்புதமான காட்சியை காண, கண் கோடி வேண்டும். வாகனங்களை 2 கி.மீ., துாரத்தில் நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டும். இதற்கு, 35 - 40 நிமிடங்கள் ஆகலாம். ராட்சத பாறைகள், ஆங்காங்கே ஓடைகள் நம்மை வரவேற்கின்றன.
இந்த புனித தலம், புராணங்களின்படி, பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு வந்ததாக நம்பப்படுகிறது. பீமன், காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்ய, அனுஜ தர்மராயரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு தேவையான நீருக்காக, அர்ஜுனன் அம்பு எய்த போது, நீர் வீழ்ச்சி உருவானதாக நம்பப்படுகிறது. அதன் பின், அப்பகுதியின் மன்னர்கள், மெனசின ராணி ஆகியோரால் கோவில் கட்டியிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
கோவிலுக்கு செல்வதற்கு கற்களால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அருகில் நீர்வீழ்ச்சி இருப்பதால், பாதுகாப்புக்காக இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் ஏறியவுடன், இடது புறம் திரும்பினால் பீமேஸ்வரா கோவிலை காணலாம்.
மஹா சிவராத்தி ரி
சிற்பங்களுடன் கூடிய கலை நயத்துடன் கூடிய கோவில் மண்டபத்தின் நடுவில் நந்தி விக்ரஹம் காணலாம். எதிரே மூலஸ்தானத்தில் சிவலிங்கம் காட்சி அளிக்கிறது. ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி அன்று, இங்கு திருவிழா நடக்கும்.
அப்போது, குளிர் காலம் என்பதால், சராவதி அடர்ந்த வனப்பகுதியில், தாங்க முடியாத குளிரையும் பொருட்படுத்தாமல், பீமேஸ்வர சுவாமியின் அருள் பெறுவதற்கு பக்தர்கள் குவிந்து விடுவர். நீர்வீழ்ச்சியின் சத்தத்துடன், கோவிலில் பூஜை, ஹோமம், பஜனை, ருத்ராபிஷேகம் நடப்பதை பார்ப்பதே பரவசமாக இருக்கும்.
மேலும், பவுர்ணமி, அமாவாசை, பொங்கல் நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவர். விழா நாட்களில், பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்கப்படும்.
வழி நெடுகிலும் குரங்குகள், பட்டாம்பூச்சிகள், பறவைகள், வித்தியாசமான மலர்களை காணலாம். அடர்ந்த வனப்பகுதி என்பதால், மாலைக்குள் கோவிலுக்கு சென்று திரும்புவது நல்லது.
இயற்கையுடன் கோவிலுக்கு வருவதை ரசிப்பதற்காகவே, இளைஞர்கள் பைக்கில் வருவர். அதுவும் மழை காலத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீரை காணலாம்.
அப்போது கோவிலுக்கு படிக்கட்டுகள் மீது நடந்து செல்லும் போது, அந்த சாரல் நம் மீது விழுவதே தனி அனுபவத்தை தரும்.
- நமது நிருபர் -

