தொடர்ந்து தாக்கிய தர்ஷன்: 'போட்டு கொடுத்த' பவித்ரா
தொடர்ந்து தாக்கிய தர்ஷன்: 'போட்டு கொடுத்த' பவித்ரா
ADDED : ஜூன் 30, 2024 11:50 PM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை தொடர்பான விசாரணையின் போது, தர்ஷனை, பவித்ரா போலீசாரிடம் போட்டு கொடுத்தது தெரிந்துள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலை தொடர்பாக பவித்ராவிடம் விசாரித்த போது, 'எனக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால், ரேணுகாசாமியை செருப்பால் ஒரு முறை மட்டும் அடித்தேன்.
அதன்பின் அவரை விட்டுவிடும்படி கூறினேன்.ஆனால், என் பேச்சை கேட்காமல் ரேணுகாசாமியை, தர்ஷன் தொடர்ந்து தாக்கினார்' என்று, போலீசார் முன்பு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷனை பார்க்க, பெங்களூரு மாரத்தஹள்ளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுனில், நேற்று காலை சிறை வாசலுக்கு வந்தார்.ஞாயிற்றுக்கிழமை என்பதால் தர்ஷனை பார்க்க அனுமதி வழங்கவில்லை.'மாதந்தோறும் தர்ஷனை சந்திப்பேன். எனது பெற்றோருக்கு அடுத்தபடியாக, தர்ஷனை மிகவும் பிடிக்கும்' என்றார்.
இந்நிலையில் தர்ஷன் ரசிகரான கோவிந்தராஜ் என்பவர், நேற்று காலை சிறைவாசல் முன்பு வந்தார். பையில் வைத்திருந்த சங்கு எடுத்து ஊதினார். 'கூடிய விரைவில் தர்ஷன் சிறையில் இருந்து வருவார்' என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.