சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் அதிரடி : பல்லாரி நகை வியாபாரியிடம் 476 கிராம் மீட்பு
சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் அதிரடி : பல்லாரி நகை வியாபாரியிடம் 476 கிராம் மீட்பு
ADDED : அக் 25, 2025 09:23 PM

பெங்களூரு : சபரிமலை அய்யப்பன் கோவில், துவாரபாலகர்கள் சிலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தில், 476 கிராமை, கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் மீட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். சபரிமலைக்கு தொழிலதிபர் விஜய் மல்லையா, கிலோ கணக்கில் தங்கத்தை தானமாக வழங்கியிருந்தார். அதைவைத்து, கருவறையின் மேற்கூரை, பிரதான கதவுகள், கருவறையின் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க தகடு வேயப்பட்டது.
இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக துவாரபாலகர்கள் சிலைகளில் இருந்து தங்க தகடுகள் கழற்றப்பட்டு, மீண்டும் பொருத்திய போது, 4 கிலோ அளவுக்கு தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.
விசாரணையில் இறங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர், துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க தகடுகளுக்கான பராமரிப்பு செலவை ஏற்ற, பெங்களூரை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை கைது செய்தனர்.
உன்னிகிருஷ்ணன் போத்தியிடம் நடத்திய விசாரணையில், திருடிய தங்கத்தில் ஒரு பகுதியை, கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்த நகைக்கடை வியாபாரி கோவர்தன் என்பவரிடம் விற்றதாக கூறினார். இதையடுத்து, பல்லாரி விரைந்த சிறப்பு புலனாய்வு குழுவினர், கோவர்தன் வசம் இருந்து சபரிமலை தங்கம், 476 கிராமை மீட்டனர். பின், உன்னிகிருஷ்ணனை பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இரண்டு மணி நேரம் நடந்த சோதனையின் போது, வீட்டில் இருந்து தங்க கட்டிகள், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
சிறப்பு புலனாய்வு குழு நடத்திய சோதனை குறித்து, பல்லாரி நகைக்கடை உரிமையாளர் கோவர்தன் அளித்த பேட்டி:
நான் அய்யப்ப பக்தன். சிறு வயதில் இருந்து சபரிமலைக்கு செல்கிறேன். 2019ல் உன்னிகிருஷ்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்ட சில மாதங்களில், உன்னிகிருஷ்ணன் என்னிடம் மொபைல் போனில் பேசினார்.அய்யப்ப சுவாமி கோவில் கதவு பாழடைந்துள்ளது. கோவிலுக்குள் பாம்புகள் செல்கின்றன. அதனால், புதிய கதவு பொருத்த வேண்டும். தங்க முலாம் பூசப்பட்ட கதவை செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டார். நானும் ஒப்புக் கொண்டேன். புதிய கதவு செய்வதற்காக, கேரளாவில் இருந்து மரம் வாங்கினோம். பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், கதவை வடிவமைத்து தங்க முலாம் பூசினோம்.
பின், அந்த கதவை பல்லாரிக்கு கொண்டு வந்து, என் நகைக்கடையில் வைத்து பூஜை செய்தேன். இங்கிருந்து கதவை சபரிமலைக்கு அனுப்பும் முன், 1,000 பேருக்கு, கதவை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, 476 கிராம் தங்கம் வாங்கியதாக, என் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுபற்றி புலனாய்வு குழு அதிகாரிகள் என்னிடம் விசாரித்தனர். திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்திற்கும் சென்று, எனக்கு தெரிந்த சில தகவல்களை கூறி வந்தேன். தற்போது விசாரணை நடக்கிறது. நிறைய உண்மைகளை வெளியே சொல்ல முடியாது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். நான் தவறு செய்யவில்லை. யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது, 'உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, 476 கிராம் தங்கம் வாங்கினேன். அது கோவில் தங்கம் என்று தெரிந்திருந்தால் வாங்கி இருக்க மாட்டேன்' என, கோவர்தன் கூறியதாகவும், நகைக்கடையில் நாணய வடிவில் இருந்த, 476 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுபற்றி உறுதியான தகவல் இல்லை.
சென்னையில் விசாரணை
சபரிமலை துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள், சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள, 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தில், செப்பனிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், தங்கம் மாயமானது குறித்து விசாரித்து வரும் கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர், கடந்த, 12ம் தேதி சென்னை வந்தனர்.
அம்பத்துார், 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தில் மூன்று நாட்கள் விசாரணை நடத்தி, சம்மன் கொடுத்துச் சென்றனர். இந்நிலையில், எஸ்.பி., சசீதரன் தலைமையில், 10 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று மாலை மீண்டும், 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்திற்கு வந்தனர். இம்முறை தங்கம் திருடிய புகாரில் சிக்கிய உன்னிகிருஷ்ணன் போத்தியையும் அழைத்து வந்தனர். அவருடன், பங்கஜ் பண்டாரி என்ற தொழிலதிபரும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.
பல மணி நேரமாக நீடித்த விசாரணையில், செப்பனிடும் பணியின் போது இடம் பெற்ற ஆவணங்கள் மற்றும் அது தொடர்பான கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

