வீட்டு உணவு கேட்டு தர்ஷன் மனு: ஆக., 20க்கு விசாரணை ஒத்திவைப்பு
வீட்டு உணவு கேட்டு தர்ஷன் மனு: ஆக., 20க்கு விசாரணை ஒத்திவைப்பு
ADDED : ஆக 01, 2024 12:09 AM

பெங்களூரு, : வீட்டு உணவு கேட்டு நடிகர் தர்ஷன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, வரும் 20ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சிறை உணவு ஒத்து கொள்ளாததால், உணவே விஷமாக மாறுவதாகவும், இதனால் வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்கும்படியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார்.
தள்ளுபடி
கடந்த மாதம் 19ம் தேதி நடந்த விசாரணையின் போது, தர்ஷனுக்கு உடனடியாக வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதி அளிக்கும்படி அவரது தரப்பு வக்கீல் கேட்டு கொண்டார். ஆனால், விசாரணையை 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
அவசரம் என்றால் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுங்கள் என்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் கூறியிருந்தார்.
இதனால் தர்ஷன் வக்கீல், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 24ம் தேதி நடந்த விசாரணையின் போது, மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் நீதிபதி விஸ்வநாத் உத்தரவிட்டார்.
புதிய மனு
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததால், உயர் நீதிமன்றத்திலும் மனு தள்ளுபடி செய்யப்படலாம் என கருதிய தர்ஷன் வக்கீல், கடந்த 29ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, மனுவை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா அமர்வில், தர்ஷனுக்கு வீட்டு உணவுக்கு அனுமதிக்க கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது.
தர்ஷன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரபுலிங்க நவதாகி வாதிட்டதாவது:
கர்நாடக சிறைச்சாலை சட்டத்தின்படி கைதி சொந்த செலவில் வீட்டு உணவை சாப்பிட அனுமதிக்கப்படுகிறார். மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கர்நாடக சிறைச்சாலை சட்டம் 1963ஐ பரிசீலிக்கவில்லை.
எனது மனுதாரரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
பாதிப்பு இல்லை
அரசு தரப்பு வக்கீல் பெல்லியப்பா வாதாடுகையில் கூறியதாவது:
மனுதாரருக்கு உணவே விஷமாக மாறவில்லை என்று மருத்துவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அவருக்கு இரண்டு வாரங்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது.
சிறை மருத்துவர்கள் கூறும் அறிவுறுத்தல்களை பின்பற்ற, சிறை அதிகாரிகளும் தயாராக உள்ளனர். சிறையில் கொடுக்கப்படும் உணவை தான் அனைத்து கைதிகளும் சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாக பிரசன்னா கூறுகையில், ''சிறையில் அடைக்கப்பட்டால் ஏழை, பணக்காரர், முக்கிய பிரமுகர் என்று இல்லை. சிறையில் அடைக்கப்பட்டால் அனைவரும் கைதிகள் தான்.
''ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் சிறை மருத்துவர் மருந்து சீட்டு கொடுப்பார். டாக்டர் பரிந்துரைக்கும் மருந்தை சிறையில் கொடுக்கின்றனர். இப்படி இருக்கையில் மனுதாரருக்கு வீட்டு உணவு ஏன்,'' என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, மனு மீதான விசாரணையை, வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.