செங்கோட்டையன் வன்மம் வெளிப்பட்டு விட்டது: இபிஎஸ் காட்டம்
செங்கோட்டையன் வன்மம் வெளிப்பட்டு விட்டது: இபிஎஸ் காட்டம்
ADDED : நவ 01, 2025 12:37 PM

சேலம்: கொடநாட்டில் 2,3 கொலை நடந்துள்ளதாக பேசுகிறார் செங்கோட்டையன். அவரது பேச்சு மூலம் அவரது வன்மம் வெளிப்பட்டுவிட்டது. இவர்களை எல்லாம் கட்சியில் வைத்திருந்தால் எப்படி இருக்கும்? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி கட்சியை விட்டு நீக்கியவர்களோடு தொடர்பு வைத்திருந்தால் நீக்காமல் என்ன செய்வார்கள்? ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததாக சொல்லும் செங்கோட்டையன், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? நான் முதல்வராக பின் தான் செங்கோட்டையனை அமைச்சராகவும், மாவட்ட செயலாளராகவும் நியமித்தேன்.
அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாதவர் செங்கோட்டையன். அதிமுகவிலிருந்து பிரிந்துசென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், செங்கோட்டையன் சொல்பவர்கள் எல்லாம் பிரிந்து சென்றவர்கள் இல்லை. கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.
டிடிவி தினகரனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். இவர் எல்லாம் அதிமுக பற்றி கருத்துக் கூற கூடாது.
வேடிக்கை பார்க்க...
அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அதிமுகவைப் பற்றி பேச டிடிவி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. செங்கோட்டையன் இதுவரை திமுக.,வை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. அவர் பி டீம் என்பது நிரூபணமாகியுள்ளது. 53 ஆண்டு இருந்தோம் என்று சொன்னால் மக்களுக்காக உழைத்து இருக்க வேண்டும். நிர்வாகிகளை அனுசரித்து சென்றால் உங்களை வாழ்த்து இருப்பார்கள்.
வன்மம்
இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்களுக்கு இந்த நிலை தான் கிடைக்கும். கொடநாடு பற்றி பேட்டி கொடுத்து இருக்கிறார். அதிமுக ஆட்சியில் இருந்த போது சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கிறேன். 2,3 கொலை நடந்துள்ளது என்று சொல்கிறார். இத்தனை ஆண்டுகளாக செங்கோட்டையன் எவ்வளவு வன்மத்தோடு இருக்கிறார் பாருங்கள். இவரையெல்லாம் கட்சியில் வைத்திருந்தால் எப்படி இருக்கும்? இது எல்லாம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இவர்கள் தனக்கு பதவி இல்லை என்றால் எந்த நிலைக்கும் போவார்கள்.
பீ டீம்
ஓபிஎஸ், அவரது மகன் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து பேசுகிறார்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்த பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள். 2026ம் தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவது தான் அவர்களின் விருப்பம். 2016ல் ரத்தம் சிந்தி ஜெயலலிதா அதிமுக ஆட்சியை அமர்த்தி கொடுத்தார்கள். துரோக செயல்களில் ஈடுபட்டவர்கள் தான் இன்றைக்கு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

