என்னை நீக்கியது வேதனை அளிக்கிறது; இபிஎஸ் செயல் சர்வாதிகாரப்போக்கு என செங்கோட்டையன் பேட்டி
என்னை நீக்கியது வேதனை அளிக்கிறது; இபிஎஸ் செயல் சர்வாதிகாரப்போக்கு என செங்கோட்டையன் பேட்டி
ADDED : நவ 01, 2025 11:59 AM

ஈரோடு: அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது வேதனை அளிக்கிறது. இபிஎஸ் செயல் சர்வாதிகாரப்போக்கு என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டி உள்ளார்.
'அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்திய செங்கோட்டையன், அதற்கான நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் கூறியிருந்தார். அதன் காரணமாக, கட்சி பதவிகளை பறிகொடுத்தார். சில தினங்களுக்கு முன், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜையில், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை, செங்கோட்டையன் சந்தித்தார். பன்னீர், தினகரனுடன் இணைந்து, தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, 'கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில், செங்கோட்டையன் தொடர்ந்து செயல்படுகிறார்' என கூறி, செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார். இது குறித்து இன்று (நவ.,01) கோபியில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:
எம்ஜிஆரின் பாராட்டுகளை பெற்றவன் நான். இரவு பகல் பாராமல் ஜெயலலிதா கை காட்டிய திசையில் பயணித்தவன். இந்த இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அயராமல் பணியாற்றினேன். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக 2 முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதும் எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்திருக்கிறேன் என்பதை நாடு அறியும்.
அதிமுகவில் எனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் நிலையில், பொதுச்செயலாளர் பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு 2019, 2021 மட்டுமின்றி மாநகரம், பேரூராட்சி, நகராட்சி அதற்கு பிறகு 2024 அவர் எடுத்த முடிவின் காரணமாக, பல சோதனைகள் காரணமாக கழகம் வெற்றி வாய்ப்பை இழந்ததை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
ஒரு மணி நேரம்
எம்ஜிஆர் வரலாற்றைப் பார்த்தபோது அவர் தோல்வி அடைந்தது என்பதே கிடையாது. ஜெயலலிதா ஒரு முறை தோல்வி ஏற்பட்டால் மறுமுறை வெற்றி என்ற இலக்கை உருவாக்குபவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்கு ஆண்டுகாலம் இயக்கத்தை வழிநடத்துவதற்காக சசிகலா அனைவரையும் அழைத்துப் பேசி, அனைவரின் கருத்துக்களையும் பகிர்ந்து என்னிடம் 1 மணி நேரம் பேசிய பிறகு நானே சொன்ன கருத்து, நாம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்பது தான்.
நாம் இருப்பது 122 பேர்தான். 11 பேர் வெளியே இருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடக்கூடாது என்று, இவருக்காக பரிந்துரை கடிதத்தை எல்லாரிடமும் பெற்றேன்.
பச்சைப் பொய்
எந்த தேர்தல் களத்திலும் இவர் பொறுப்பேற்று வெற்றி என்பதை எட்ட முடியாத சூழலில்தான், பார்லிமென்ட் தேர்தல் முடிந்த பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து, வெளியே சென்றவர்கள் மன வேதனையோடு ஆற்றாமல் துயரத்தோடு இருப்பவர்களை சேர்க்க வேண்டும் என்று கருத்துக்களை வெளிப்படுத்தினோம்.
அந்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற கருத்து பரிமாறப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில், 'யாருமே என்னைப் பார்க்கவில்லை. பச்சைப் பொய்' என்று சொன்னார்.
கெடு இல்லை
சோர்வோடு இருப்பவர்களை அரவணைத்து சென்றால்தான் வெற்றியைப் பெற முடியும். 2026க்கு பிறகு நாம் ஏதாவது இயக்கத்தில் வெற்றி பெறவில்லை என்றால், அதற்கு யார் காரணம் என்ற கருத்து பரிமாறப்படும் என்பதால்தான் அந்த கருத்தை சொன்னேன்.
அன்று 10 நாட்கள் பேச்சு தொடங்க வேண்டும் என்று சொன்னேன். இது கெடு இல்லை. ஒரு மாதம், ஒன்றரை மாதம் எடுத்துக்கொள்ளலாம். யாரைச் சேர்க்கலாம்? வேண்டாம்? என்பது பொதுச்செயலாளர் முடிவெடுக்கலாம் என்று கூறினேன். என்னைப் பொறுத்தவரை இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பணியாற்றினேன்.
படுதோல்வி
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஏறத்தாழ படுதோல்வி ஏற்பட்டு இருக்கிறது. 10 தொகுதிகளில் 3ம் இடம். 2 தொகுதிகளில் 4ம் இடம். நம் இயக்கத்தை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றுதான் கருத்து பரிமாறப்பட்டது.
நான் சொல்வதற்கு காரணம், அதிமுக புத்துயிர் பெற்று, நல்லாட்சி தமிழகத்தில் நடைபெற வேண்டும். அந்த கருத்துக்கு ஏற்ப என் கருத்துக்களை வெளிப்படுத்தினேனே தவிர, அதன்பின்பு அனைத்து பொறுப்புகளும் நீக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும்.
இந்த இயக்கதை பொறுத்தவரை தடுமாறாமல், நல்லாட்சி தமிழகத்தில் உருவாக்கவே இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினேன். தேவர் ஜெயந்திக்கு செல்லும்போது அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றுதான் பேசினேன். நீக்கப்பட்டவர்களுடன் பேசியது உண்மை. இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பேசினேன்.
தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதற்கு கிடைத்த பரிசாக அதிமுகவில் இருந்து என்னை நீக்கியுள்ளனர். கொடநாடு வழக்கில் ஏன் இன்று வரை நாம் குரல் கொடுக்கவில்லை? நான் சாதாரண பொறுப்பாளர்.
அவர் தான் ஏ 1
ஜெயலலிதா இல்லத்தில் 3, 4 கொலைகள் நடந்துள்ளது. நான் பி டீமில் இல்லை. அவர் ஏ1ல் இருக்கிறார் அது தான் உண்மை. அவர் ஏ1 ஆக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு, உண்மையில் மன வேதனை அடைகிறேன், வருத்தப்படுகிறேன். கண்ணீர் சிந்துகிறேன். இந்த இயக்கத்திற்கு 53 ஆண்டுகள் என்னை அர்ப்பணித்துள்ளேன். அப்படிப்பட்ட எனக்கு இந்த தீர்ப்பு மன வேதனையை அளிக்கிறது. இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. இவர் பொறுப்பிற்கு வருவதற்கு முன், பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளேன்.
வேதனை
எனக்கு ஒரு கடிதமாக அனுப்பியிருக்க வேண்டும். ஒரு சீனியர். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர். ஒரு கடிதம் அனுப்பி இதற்கு பதில் சொல்லுங்கள் என்பது தான் விதியில் இருக்கிறது. அவருடைய சர்வாதிகாரப் போக்கில் அவர் இன்று உருவாக்கியிருப்பது வேதனை அளிக்க கூடியதாக இருக்கிறது. தொண்டர்கள் உணர்வை தான் நான் வெளிப்படுத்தினேன். எல்லோருக்கும் துரோகம் செய்தமைக்கு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு கொடுக்க வேண்டும்.
வழக்கு தொடருவேன்
தற்காலிக பொதுச் செயலாளரான பழனிசாமி, 53 ஆண்டுகளாக கட்சியில் இருந்த என்னை நீக்கியுள்ளார். அதிமுகவிலிருந்து என்னை கட்சியின் விதிப்படி நீக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன். அதிமுகவில் நீடிக்கவே நான் விரும்புகிறேன். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

