10 மாதங்களுக்கு பின் படப்பிடிப்புக்கு திரும்பிய தர்ஷன்
10 மாதங்களுக்கு பின் படப்பிடிப்புக்கு திரும்பிய தர்ஷன்
ADDED : மார் 12, 2025 11:27 PM

மைசூரு: சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைதானதால் பாதியில் நிறுத்தப்பட்ட, 'டெவில்' திரைப்பட படப்பிடிப்பு மைசூரில் நேற்று துவங்கியது.
பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பியதால், சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கடத்தி வந்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தர்ஷன் சிறைக்கு சென்றதால், அவர் ஒப்புக் கொண்டிருந்த திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் 'டெவில்' படப்பிடிப்பும் பாதியில் நின்றிருந்தது.
இந்நிலையில் ஜாமினில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் வெளியே வந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்தும், முதுகு வலி காரணமாக படப்பிடிப்பில் தர்ஷனால் பங்கேற்க முடியவில்லை.
தற்போது அவர் குணமடைந்துள்ளதால், படப்பிடிப்பை துவக்க படக்குழுவினர் முடிவு செய்தனர். மைசூரில் நேற்று படப்பிடிப்பு துவங்கியது.
மார்ச் 12 முதல் 15ம் தேதி வரை, படப்பிடிப்பு நடத்த, சட்டம் - ஒழுங்கு பிரிவு டி.சி.பி., முத்துராஜ் அனுமதி அளித்துள்ளார்.
மைசூரின் அரசு விருந்தினர் இல்லத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை, படப்பிடிப்பு நடக்கும்.
மார்ச் 15ம் தேதிக்கு பின், லலித மஹாலில் படப்பிடிப்பு நடத்த, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நடிகர் தர்ஷனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவரது போலீஸ் பாதுகாப்புக்கு போலீசாரை நியமிக்க, 1,64,785 ரூபாய் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 10 மாதங்களுக்கு பின், நடிகர் தர்ஷன் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
மைசூரு சாமுண்டீஸ்வரி மலையின், சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்து, சிறப்பு வழிபாடு செய்தார். அங்கிருந்து நேரடியாக அரசு விருந்தினர் இல்லத்துக்கு வந்து, படப்பிடிப்பில் பங்கேற்றார்.
'டெவில்' திரைப்பட படப்பிடிப்பு, 40 சதவீதம் முடிந்துள்ளது. வரும் 2026 பிப்ரவரியில் தர்ஷனின் பிறந்த நாளன்று திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.