டி.சி.சி., வங்கி தேர்தலுக்கு ஆப்பு? கோலார் காங்.,கில் தீராத மோதல்!
டி.சி.சி., வங்கி தேர்தலுக்கு ஆப்பு? கோலார் காங்.,கில் தீராத மோதல்!
ADDED : செப் 03, 2024 10:31 PM
கோலார் மாவட்டத்தில், கர்நாடக உணவுத்துறை அமைச்சர் முனியப்பாவுக்கு எதிராக இருந்த கோஷ்டிகள், இன்னும் ஓய்ந்தபாடில்லை. தந்தையை தொடர்ந்து அவரது மகளுக்கு எதிராகவும் ஒன்றாக திரண்டு உள்ளனர்.
சமீபத்தில் அமைச்சர் முனியப்பாவுடன், அவரது மகளான தங்கவயல் எம்.எல்.ஏ., ரூபகலா, முதல்வர் சித்தராமையாவை சந்திக்க, அவரின் காவேரி இல்லத்தில் சந்திக்க சென்றார். அப்போது, அங்கு, முனியப்பாவின் கோலார் மாவட்ட உட்கட்சி எதிர்ப்பாளர்கள் வந்திருந்தனர்.
இவர்களை பார்த்ததும், முனியப்பா, 'எஸ்கேப்' ஆனார். வந்த வேலை முடியாததால், ரூபகலா மட்டும் அங்கேயே இருந்தார். கோலார், சிக்கபல்லாப்பூர் என இரு மாவட்டங்களாக பிரிந்திருந்தாலும், இன்னும் கூட இரு மாவட்டங்கள் இணைந்த, டி.சி.சி., எனும் கோலார் - சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.
நிர்வாக அதிகாரி
இந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை ஓராண்டுக்கு முன்பே நடத்தி இருக்க வேண்டும். ஆனால், நடத்தவில்லை. நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். வங்கி நிர்வாகத்தை அவரே கவனித்து வருகிறார்.
இதற்கிடையில், வங்கியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வங்கி தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ., ரூபகலா மட்டுமே, முதல்வர் சித்தராமையாவை வலியுறுத்தினார்.
இதற்கு, இரு மாவட்டங்களின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் முதல்வர் முன்னிலையிலேயே கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
'பெரும் இழப்பு ஏற்பட்ட டி.சி.சி., வங்கிக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர் கோவிந்த கவுடா. அவரும், நமது கட்சியைச் சேர்ந்தவர். மீண்டும் அவரை தலைவர் ஆக விடாமல் தடுக்கலாமா' என்று ரூபகலா பதிலடி கொடுத்தார்.
பழைய கதை
'சட்டசபை தேர்தலின் போதும், லோக்சபா தேர்தலின் போதும் காங்கிரசுக்கு எதிர்ப்பாக கோவிந்த கவுடா வேலை செய்ததை மறக்க முடியுமா' என எம்.எல்.சி.,யும், வங்கி இயக்குனர்களில் ஒருவருமான அனில் குமார் பழைய கதையை கிளற, அவருக்கு ஆதரவாக, முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது, 'டி.சி.சி., வங்கியை தரம் உயர்த்தியது முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் தான்' என்று அழுத்தமாக கூறினார்.
இவர்களுக்கு சவால் விடும் வகையில், ரூபகலா, 'கடந்த 10 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்க செய்ததுடன், அனைத்து தொகுதிகளிலும் டி.சி.சி., வங்கி மூலம் அனைவருக்கும் லாபம் கிடைக்க செய்தது கோவிந்த கவுடா தான்' என்றார்.
சிக்கபல்லாப்பூர் தொகுதி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுதாகர் குறுக்கிட்டு, 'இன்னும் பல சொசைட்டிகளில் தேர்தல் நடக்கவில்லை. இரு புதிய தாலுகாக்களில் வங்கி கிளை துவங்கவில்லை. இப்பணியை முதலில் முடிக்க வேண்டும். இப்போதைக்கு தலைவர் தேர்தல் அவசியம் இல்லை' என்றார்.
இதற்கு மத்தியில், 'டி.சி.சி., வங்கியின் வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும்; பின்னர் பார்த்துக் கொள்ளலாம்' என்றார் அனில் குமார்.
கலெக்டருக்கு பரிந்துரை
வாதம் முற்றுவதை அறிந்த முதல்வர், கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷிடம், கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷாவை மொபைலில் அழைக்குமாறு கூறினார்.
லைனில் வந்த அவரிடம், 'சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதன்படி செய்யுங்கள்' என, முதல்வர் உத்தரவிட்டார்.
அப்படியென்றால், 'நீதிமன்றத்தில் முறைகேடு வழக்கு முடியும் வரை, தேர்தல் நடத்தாமல், தள்ளிப் போடு' என்று சொல்லாமல் சொல்லி அந்த பிரச்னையை அடக்கி விட்டார்.
கோலார் மாவட்ட மகளிர் அமைப்புகளை ஏவி விட்டு, முதல்வருக்கு எதிராக மகளிர் சங்கத்துக்கு டி.சி.சி., வங்கியில் அளித்த கடனை தள்ளுபடி செய்ய போராட்டம் நடத்த மூளையாக செயல்பட்டவர்...
சீனிவாசப்பூர் தொகுதியில் ரமேஷ் குமார் தோல்வி அடையச் செய்வதற்காக ம.ஜ.த.,வின் வெங்கட்ஷிவா ரெட்டிக்கு தாராளமாக நிதியுதவி செய்ததும் கோவிந்த கவுடா தான் என்பதையும் காதோடு காதாக சொல்லி வைத்திருப்பதால், முதல்வர் சித்தராமையாவும் கூட கோவிந்த கவுடாவுக்கு சாதகமாக இல்லை என்று வங்கி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -