காசாவை விடுவிப்பதே எங்கள் இலக்கு: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்
காசாவை விடுவிப்பதே எங்கள் இலக்கு: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்
ADDED : ஆக 10, 2025 09:07 PM

ஜெருசலேம்: 'எங்கள் இலக்கு காசாவை ஆக்கிரமிப்பதல்ல, காசாவை விடுவிப்பதாகும்,' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது 2023ல் போர் துவங்கியது. காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டது.
இந்நிலையில் எங்களுடைய இலக்கு காசாவை விடுவிப்பதுதான் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களுடன் பேசியதாவது:
வேலையை முடித்து ஹமாஸின் தோல்வியை நிறைவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை, எங்கள் இலக்கு காசாவை ஆக்கிரமிப்பதல்ல, காசாவை விடுவிப்பதாகும்.
காசாவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மிகக் குறுகிய கால அட்டவணை உள்ளது. அங்குள்ள இலக்குகளில், காசாவை ராணுவமயமாக்குதல், இஸ்ரேலிய ராணுவம் அங்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டை ஏற்படுத்துதல் மற்றும் இஸ்ரேலியரல்லாத சிவில் நிர்வாகம் ஆகியவை இதில் அடங்கும்.
காசாவின் பல பிரச்னைகளுக்கு ஹமாஸ் போராளிக்குழுதான் முக்கிய காரணம். காசா பகுதியில் உதவி கோரி வந்த பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு பேசினார்.