ADDED : ஜூலை 04, 2024 01:57 AM
பாலம்:விமானப்படை நிலையத்தில் மர்மமான முறையில் இறந்த மயில்களின் மரணத்திற்கு வெப்ப வாதமே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
பாலம் விமானப்படை நிலையத்தில் ஜூன் 4 முதல் 25 வரை அடுத்தடுத்து 28 மயில்கள் மர்மமான முறையில் இறந்தன. தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், நான்கு மயில்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவுகள் குறித்து நேற்று முன்தினம் வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வைரஸ் தாக்குதலால் மயில்கள் உயிரிழந்திருக்கலாம் என முதலில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. அதற்காக தான் பிரேத பரிசோதனை முக்கியமாக நடத்தப்பட்டது.
எனினும் மயில்கள் இறப்பில் வைரஸ் பாதிப்பு இல்லை. நான்கு மயில்களுமே அதீத வெயிலால் பாதிக்கப்பட்டே உயிரிழந்துள்ளன.
ஜூன் 28க்கு பிறகு மயில்கள் உயிரிழக்கவில்லை. நகரில் படிப்படியாக வெப்பம் குறைந்தது காரணம். அடுத்து பெய்த மழையால் வெப்ப அலை இல்லை.
அதனால் மற்ற மயில்களும் வெப்ப அலை காரணமாகவே உயிரிழந்திருக்க வேண்டும் என்று நம்புகிறோம்.
இதுபோன்று மீண்டும் நிகழாதவாறு இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.