காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளில் கூடுதல் படைகளை நிறுத்த முடிவு
காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளில் கூடுதல் படைகளை நிறுத்த முடிவு
ADDED : பிப் 25, 2025 01:16 AM

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாபில், பாகிஸ்தானுடனான எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்த, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுடனான 2,289 கி.மீ., துார சர்வதேச எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இது, வடக்கே ஜம்மு -- காஷ்மீரில் துவங்கி, மேற்கு பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வரை நீண்டுள்ளது. இங்கு பாதுகாப்பு பணிகளை, பி.எஸ்.எப்., மேற்கொள்கிறது.
பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவது மற்றும் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக, போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பஞ்சாபில் கடந்த ஆண்டு மட்டும், 294 ட்ரோன்கள் மற்றும் 282 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, எல்லையை தாண்டி ஊடுருவியதாக, 161 கடத்தல்காரர்கள் மற்றும் 30 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாபில், இந்த ஊடுருவல் மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, அங்கு எல்லையில் பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்த பி.எஸ்.எப்., திட்டமிட்டுள்ளது. இதற்காக கூடுதல் படைகளை இங்கு பணியமர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைத் தவிர, எல்லையோரங்களில் ஆறு இடங்களில் படையின் தற்காலிக தலைமையகங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்த தலைமையகங்களில் உயரதிகாரிகள் தங்கியிருந்து, தேவையான உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பிக்க முடியும்.