ரத்து செய்யப்பட்ட பணிகளுக்கு முறைகேடாக பணம் வழங்க முடிவு?
ரத்து செய்யப்பட்ட பணிகளுக்கு முறைகேடாக பணம் வழங்க முடிவு?
ADDED : ஜூலை 02, 2024 06:42 AM
பெங்களூரு: பணிகளே செய்யாத, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட பணிகளுக்கு, முறைகேடாக பணம் வழங்குவதற்கு பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி ஏற்கனவே அறிவித்து, பல வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிய ஒப்பந்ததாரர்களுக்கு, இரண்டு, மூன்று ஆண்டுகளாக இன்னும் நிதி வழங்கப்படவில்லை. பல முறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த பயனும் இல்லை.
இந்த நிலையில், 2016 - 17 முதல் 2020 - 21 வரையில், கால்வாய்களை துார்வாருதல், சாலை மேம்பாடு, டிராக்டர்கள் பயன்பாடு, பள்ளி கட்டங்கள் சீரமைப்பது, ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், தெரு விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து, மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணையும் வழங்கப்பட்ட நிலையில், 2022 டிசம்பரில் 7,931 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணி ஒதுக்கீட்டு ஆணைகளை நிதி நெருக்கடியை காரணம் காட்டி, திடீரென மாநகராட்சி ரத்து செய்தது. இப்படி ரத்து செய்யப்பட்ட பணிகளுக்கு பணம் வழங்குவதற்கு, தற்போது மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட, பணியே செய்யாத பணிகளின் பெயரில் 97.68 கோடி ரூபாயை ஒப்பந்ததாரர்கள் பெயர்களில் ஒதுக்கீடு செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேடு விவகாரம் நேற்று ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வந்தது. மாநகராட்சியின் இந்த செயல்பாடு பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கேட்டபோது, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், குற்றச்சாட்டுக்கு தொடர்பு இல்லாமல் பதில் அளித்தார். அவர் நேற்று கூறுகையில், ''வளர்ச்சிப் பணிகள் செய்வோம் என்று தகுந்த ஆதாரங்களை வழங்கிய பின்னரே, ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு தரப்படும். பொறியாளர்கள், தலைமை அலுவலக அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், குழப்பத்துக்கு காரணம்,'' என்றார்.
மாநகராட்சியின் இந்த குளறுபடி, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.