ADDED : ஜூலை 14, 2024 11:44 PM

புதுடில்லி: 'இடைத்தேர்தலில், 'இண்டியா' கூட்டணி பெரும் வெற்றி பெற்றதாகவும், பா.ஜ., தோல்வி அடைந்ததாகவும் கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை' என, பா.ஜ., மூத்த தலைவர் அமித் மாள்வியா, அதற்கான விளக்கத்தை வெளியிட்டு உள்ளார்.
தமிழகம் உள்பட ஏழு மாநிலங்களில் காலியாக இருந்த 13 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதன் முடிவு கள் நேற்று முன்தினம் வெளியாயின.
சுயேச்சைகள் வசம்
இதன்படி, இண்டியா கூட்டணி 10 இடங்களிலும், பா.ஜ., இரண்டு இடங்களிலும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வென்றன.
லோக்சபா தேர்தலுக்குப் பின் நடந்த முதல் இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளதாக அதில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூறியுள்ளன. மேலும், பா.ஜ.,வுக்கு மற்றொரு தார்மீக தோல்வி என்றும் கூறின.
இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அமித் மாள்வியா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
இண்டியா கூட்டணியின் இந்த வெற்றி கொண்டாட்டம், 'புஸ்' ஆகப் போகிறது.
இதோ இடைத்தேர்தல் முடிவுகள் விபரம்:
திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், தலா நான்கு இடங்களில் வென்றன.
ஆம் ஆத்மி மற்றும் தி.மு.க., தலா ஒரு இடத்தில் வென்றன. பீஹாரில் ஒரு சுயேச்சை வென்றார். பா.ஜ.,வுக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன.
இடைத் தேர்தல் நடந்த, 13 தொகுதிகளில், நான்கு மட்டுமே பா.ஜ., வசம் இருந்தது. ஹிமாச்சலில் இடைத் தேர்தல் நடந்த மூன்று இடங்களும் சுயேச்சைகள் வசம் இருந்தன.
உத்தரகண்டில் இரண்டு இடங்களை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்த இடத்தை பா.ஜ., வென்றுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் தி.மு.க., தங்களுடைய தொகுதிகளை தக்க வைத்துள்ளன.
மோசடி
இதன்படி பார்த்தால் மேற்கு வங்கத்தில் மட்டுமே பா.ஜ., தன் தொகுதிகளை இழந்துஉள்ளது.
அங்கு, ஒரு தொகுதியை திரிணமுல் காங்., தக்க வைத்தது. எங்களிடம் இருந்த மூன்று தொகுதிகளை வென்று உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவது என பல மோசடிகள் நடந்தன. நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால், நிலைமை மாறியிருக்கும்.
இதன்படி பார்த்தால், ஏற்கனவே தங்களிடம் இருந்த தொகுதிகளைத்தான், இண்டியா கூட்டணி கட்சிகள் தக்க வைத்துஉள்ளன. இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது. இது பா.ஜ.,வுக்கு தோல்வி அல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.