பாகிஸ்தானின் வாசீம் அக்ரமுக்கு சிக்கல்: ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தால் வந்த பிரச்னை
பாகிஸ்தானின் வாசீம் அக்ரமுக்கு சிக்கல்: ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தால் வந்த பிரச்னை
ADDED : ஆக 20, 2025 03:25 PM

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசீம் அக்ரம் மீது ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து லாகூரில் புகார் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.
பாகிஸ்தானை சேர்ந்த முகமது பைஸ் என்பவர் லாகூரில் உள்ள தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான வாசீம் அக்ரம் மீது புகார் அளித்துள்ளார். அதில், ‛பாஜி' எனும் வெளிநாட்டு சூதாட்ட செயலியின் விளம்பர தூதராக வாசீம் அக்ரம் நியமிக்கப்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரித்ததில், அந்த சூதாட்ட செயலியின் போஸ்டர்கள் மற்றும் வீடியோக்களில் வாசீம் அக்ரம் இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும் இதுப்பற்றி தேசிய சைபர் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த புகார் தொடர்பாக வாசீம் அக்ரம் இதுவரை எந்தவொரு விளக்கமும் தெரிவிக்கவில்லை. மேலும், இதே செயலியை விளம்பரப்படுத்தியதாக பிரபல டிக்டாக் மற்றும் யுடியூப் நட்சத்திரமான சாத்-உர்-ரெஹ்மான் கடந்த ஆகஸ்ட் 16ல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.