ADDED : நவ 19, 2025 11:41 PM

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த கேரள உயர் நீதிமன்றம், 'கடந்த ஆறு மாதங்களாக பக்தர்கள் வசதிகளுக்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?' என, கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் மண்டல பூஜை கடந்த 17ல் துவங்கியது. இதையொட்டி, 16ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதலே ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுக்க துவங்கினர். இதனால், பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மலைப்பாதையில் கூட்டம் முண்டியடித்து சென்றதால், குழந்தைகளுடன் சென்றவர்கள் முன்னேறி செல்ல முடியாமல் திணறினர். பதினெட்டாம் படியிலும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்.
நடை திறக்கப்பட்ட, 48 மணி நேரத்தில், இரண்டு லட்சம் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. சபரிமலை சென்ற பக்தர்கள் அடிப்படை வசதி கூட கிடைக்காமல் அவதிப்படுவதாக கேரள எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என, கேரள உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கூறியதாவது:
சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியது முதலே கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்பே செய்யாதது ஏன்? ஆறு மாதங்களுக்கு முன்பே, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்திருந்தால் கூட்ட நெரிசலை தவிர்த்திருக்கலாம்.
இதற்கு, தேவசம் போர்டின் அதிகாரிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தேவசம் போர்டு ஏன் பின்பற்றவில்லை. ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்களை மலையேற அனுமதித்தது ஏன்? ஒரே இடத்தில் பக்தர்களை தேக்கி வைப்பது ஆபத்தானது. எனவே, நெரிசலைக் கட்டுப்படுத்த அவர்களை சிறிய குழுக்களாக பிரித்து அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்தின் கவலையை கருத்தில் கொள்வதாகவும், உரிய ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்யும் என்றும் புதிதாக நியமிக்கப்பட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நெரிசலை சமாளிக்க அரக்கோணத்தில் இருந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேற்று சபரிமலைக்கு விரைந்தனர்.

