பெங்களூரில் ரூ.7.11 கோடி கொள்ளை: வங்கிக்கு எடுத்து சென்றபோது துணிகரம்
பெங்களூரில் ரூ.7.11 கோடி கொள்ளை: வங்கிக்கு எடுத்து சென்றபோது துணிகரம்
ADDED : நவ 19, 2025 11:37 PM

பெங்களூரு: பெங்களூ ரில், தனியார் வங்கி கிளைக்கு வேனில் எடுத்துச் சென்ற, 7.11 கோடி ரூபாயை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எனக் கூறி, கொள்ளை அடித்து தப்பிய எட்டு பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜே.பி.நகரில் ஹெச்.டி.எப்.சி., வங்கி உள்ளது. இந்த வங்கியின் கிளை ஹெச்.பி.ஆர்., லே - அவுட்டில் உள்ளது. நேற்று மதியம், 12:20 மணிக்கு ஜே.பி.நகர் வங்கியில் இருந்து, 7.11 கோடி ரூபாயுடன், சி.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வேன், ஹெச்.பி.ஆர்., லே - அவுட் கிளைக்கு புறப்பட்டது.
'டிப்டாப்' உடை மதியம் 1:00 மணிக்கு அசோகா சதுக்கம் பகுதியில் வாகனம் சென்றபோது, வேனை பின்தொ டர்ந்து வந்த, 'டொயோடா இன்னோவா' கார் திடீரென, வாகனத்தை மறித்தது. அந்த காரின் பின்பக்க கண்ணாடியில், 'கவர்மென்ட் ஆப் இந்தியா' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
காரில் இருந்து, 'டிப்டாப்' உடை அணிந்து இறங்கிய எட்டு பேர், வேனில் இருந்த டிரைவர், இரண்டு கன்மேன்கள், நிறுவன ஊழியர்களிடம் பேசினர். 'நாங்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள். இந்த வேனில் சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவதாக, எங்களுக்கு தகவல் வந்துள்ளது' என்று கூறினர்.
வேனில் இருந்த கன்மேன்கள், ஊழியர்களை கீழே இறக்கி விட்டனர். 'நாங்கள் சித்தாபுரா போலீஸ் நிலையத்திற்கு செல்கிறோம். எங்களை பின்தொடர்ந்து நீ மட்டும் வேனை ஓட்டி வர வேண்டும்' என்று, வேன் டிரைவரிடம் கூறினர்.
அதன்படி, இன்னோவா காரை பின்தொடர்ந்து, வேனை டிரைவர் ஓட்டி சென்றார்.
ஓசூர் சாலையில் உள்ள டெய்ரி சதுக்கம் மேம்பாலத்தின் நடுப்பகுதியில் சென்ற போது, இன்னோவா கார் நிறுத்தப்பட்டது. வேனை டிரைவரும் நிறுத்தினார்.
போலி பதிவெண் காரில் இருந்து இறங்கியவர்கள், டிரைவரை மிரட்டி வேனின் பின்பக்க கதவை திறந்து, பணம் இருந்த பெட்டிகளை இன்னோவா காரில் ஏற்றிக்கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர்.
இதுபற்றி சக ஊழியர்களுக்கும், சித்தாபுரா போலீசாருக்கும், வேன் டிரைவர் தகவல் கொடுத்தார். சித்தாபுரா போலீசார், தெற்கு மண்டல டி.சி., லோகேஷ், தென்கிழக்கு மண்டல டி.சி., சாரா பாத்திமா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கே.ஏ.03 என்.சி.8052 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா காரில் கொள்ளையர்கள் வந்தது தெரிந்தது.
அந்த பதிவெண்ணை வைத்து விசாரித்த போது, திப்பசந்திராவில் வசிக்கும் கங்காதர் என்பவருக்கு சொந்தமான, 'ஸ்விப்ட்' காரின் நம்பர் என்று தெரிந்தது. இதனால் போலி பதிவெண்ணை, கொள்ளையர்கள் பயன்படுத்தியது தெரிந்தது.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறுகையில், ''கொள்ளை நடந்த உடனேயே தகவல் கொடுக்காமல், சிறிது நேரம் கழித்து தான் தனியார் நிறுவன ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். எங்களுக்கு அவர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம்,'' என்றார்.
வேன் டிரைவர் பினோத், 45 என்பவரை சந்தேகத்தின் அடி ப்படையில் பிடித்து, சித்தாபுரா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

