கூடுதல் பெட்டிகள் வருவதில் தாமதம் மெட்ரோ ரயில்களில் பயணியர் நெருக்கடி
கூடுதல் பெட்டிகள் வருவதில் தாமதம் மெட்ரோ ரயில்களில் பயணியர் நெருக்கடி
ADDED : ஆக 17, 2024 11:17 PM

பெங்களூரு: மெட்ரோ ரயில்களில் நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கூடுதல் ரயில் பெட்டிகள் சேர்க்க, இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மெட்ரோ நிறுவன நிர்வாக இயக்குனர் மஹேஸ்வர ராவ் கூறியதாவது:
ஆரம்பத்தில் மெட்ரோ ரயில்களில், மாதம் ஐந்து லட்சம் பேர் பயணம் செய்தனர். 2020 வேளையில் சராசரியாக தினமும் 1.28 லட்சம் பேர் பயணம் செய்தனர். 2022ல் இந்த எண்ணிக்கை 4.32 லட்சமாகவும், 2023ல் 6.04 லட்சமாகவும் அதிகரித்தது.
நகரில் வாகன நெருக்கடி அதிகரிப்பதால், மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு, பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதற்கு தகுந்த படி, மெட்ரோ ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
ஒயிட்பீல்டு வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்பட்ட பின், பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதை மனதில் கொண்டு, கூடுதல் பெட்டிகள் பொருத்த மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெட்டிகளை வினியோகிக்கும் பொறுப்பை, சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன் ஏற்றுள்ளது. படிப்படியாக பெட்டிகளை சப்ளை செய்கிறது. அதன்பின் இந்தியாவிலேயே பெட்டிகள் தயாரிக்க, ஹைதராபாத்தில் நிலம் வழங்கும்படி அந்நிறுவனம் கோரியது.
நிலம் வழங்க இந்திய அரசு தயங்கியது. அதன்பின் பெட்டிகள் தயாரிக்க, கோல்கட்டாவின், டிடாகர் ரயில்வே சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்துக்கு, உள் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரிக்கிறது. பல காரணங்களால் பெட்டிகள் வழங்குவது தாமதமாகிறது.
மொத்தம் 21 பெட்டிகள் வினியோகிக்கும். வரும் ஜூன் மாதத்துக்குள் 10 பெட்டிகள் வரும். நடப்பாண்டு டிசம்பரில் ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா பாதையில் வர்த்தக போக்குவரத்து துவங்கும். இந்த பாதைக்கு எட்டுப் பெட்டிகள் சப்ளை செய்யப்படும். அதன்பின் ஆறு பெட்டிகள் சப்ளையாகும்.
காளேன அக்ரஹாரா - நாகவாரா இடையே 2025லும், சென்ட்ரல் சில்க் போர்டு - தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையம் இடையே 2026லும் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும். இதற்கு பெட்டிகள் சப்ளை செய்யும் டெண்டரை, பெமல் நிறுவனம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

