ADDED : ஏப் 03, 2024 01:34 AM

புதுடில்லி,
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அறையில் சிறிது நேரம் மட்டுமே துாங்கியதாக, சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டில்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, மார்ச் 21ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்ற காவல்
அமலாக்கத் துறை காவல் முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஏப்., 15 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, திஹார் சிறையில் அறை எண் - 2ல் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறை அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:
நேற்று முன்தினம் மாலை, 4:00 மணி அளவில், திஹார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்து வரப்பட்டார். அறையில் அடைக்கப்படுவதற்கு முன், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, அவரது சர்க்கரை அளவு 50க்கு கீழ் இருந்ததால், டாக்டர்களின் ஆலோசனையின் படி மருந்துகள் வழங்கப்பட்டன.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இரவில், வீட்டில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. அவருக்கு ஒரு மெத்தை, போர்வைகள் மற்றும் இரண்டு தலையணைகள் வழங்கப்பட்டன.
அவர் சிறிது நேரம் சிமென்ட் தரையில் துாங்கினார். துாக்கம் வராததால், நள்ளிரவில் அறைக்குள் நடந்தபடியே இருந்தார். மதியம் மற்றும் இரவில், வீட்டில் சமைத்த உணவை சாப்பிட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை எழுந்த உடன், அறையில் அரவிந்த் கெஜ்ரிவால் தியானம் செய்தார். அதன் பின் அவருக்கு தேநீர் மற்றும் இரண்டு பிஸ்கட்கள் வழங்கப்பட்டன.
கண்காணிப்பு கேமரா வாயிலாக, அவரை சிறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்; அறைக்கு வெளியே பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளனர்.
ராஜினாமா
ராமாயணம், மகாபாரதம் மற்றும் பிரதமர்கள் எப்படி முடிவு செய்கின்றனர் ஆகிய புத்தகங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. மனைவி சுனிதா, அவரது குழந்தைகள், தனிச் செயலர் பிபவ் குமார், ஆம் ஆத்மி அமைப்பு பொதுச் செயலர் சந்தீப் பதக் ஆகியோரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவை, ஆம் ஆத்மியின், 62 எம்.எல்.ஏ.,க்களில், 55 பேர் சந்தித்தனர். அப்போது, 'இரண்டு கோடி டில்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணையாக இருக்கின்றனர்.
'எக்காரணத்தைக் கொண்டும் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது' என, அவரிடம் எம்.எல்.ஏ.,க் கள் வலியுறுத்தினர்.
'பா.ஜ., எண்ணம் பலிக்காது'

