அமலாக்க துறை அத்துமீறுகிறது டில்லி முதல்வர் பதில் மனு
அமலாக்க துறை அத்துமீறுகிறது டில்லி முதல்வர் பதில் மனு
ADDED : ஏப் 28, 2024 12:41 AM
புதுடில்லி: தங்களுடைய எல்லையை தாண்டி, தங்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது என, அமலாக்கத் துறை அத்துமீறி நடந்து கொள்கிறது என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டில்லி மதுபான கொள்கை மோசடி வழக்கில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனு தாக்கல்
இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக் கோரியும், கைது நடவடிக்கையை எதிர்த்தும், அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மோசடியின் மையமாக இருப்பதாலும், தங்களுடைய சம்மன்களை மதிக்காததாலும் கைது செய்ததாக, அமலாக்கத் துறை சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அமலாக்கத் துறையின் பதில் மனுவை பார்க்கும்போது, ஒட்டுமொத்தமாக அது தன்னை மிகவும் உயர்ந்த நிலையில் பார்க்கிறது என்பது தெரியவருகிறது.
எனக்கு, ஒன்பது முறை சம்மன் அனுப்பி ஆஜராகாததால், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.
ஆனால், அவர்கள் அனுப்பிய சம்மன்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு நாங்கள் பதில் கடிதம் எழுதினோம். அதற்கு பதில் தரப்படவில்லை.
வீடியோ கான்பரன்ஸ்
தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியோ அல்லது வழக்கறிஞர் வாயிலாகவோ அல்லது வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவோ விசாரிக்க முடியும்.
ஆனால், தங்களை மிகவும் உயர்வாக கருதும் அமலாக்கத் துறை, தன் அதிகாரத்தை அத்துமீறி பயன்படுத்தி கைது செய்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், என்ன ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது பற்றி இதுவரை தெரிவிக்கவில்லை.
அதனால், உடனடியாக இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

