காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கினார் டில்லி அமைச்சர்
காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கினார் டில்லி அமைச்சர்
ADDED : ஜூன் 22, 2024 01:08 AM

புதுடில்லி, ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, டில்லி அமைச்சர் ஆதிஷி நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கினார்.
டில்லியில், வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் காத்திருக்கின்றனர்.
டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசும், குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
மோடிக்கு கடிதம்
சமீபத்தில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி கூறுகையில், 'டில்லிக்கு வழங்க வேண்டிய நீரை ஹரியானா வழங்க வேண்டும்.
'இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இரு நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்' என்றார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி டில்லியின் போகல் என்ற இடத்தில், நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார்.
அப்போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஆம் ஆத்மி எம்.பி., - சஞ்சய் சிங், அமைச்சர் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிறையில் இருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பிய கடிதத்தை, அவரது மனைவி சுனிதா வாசித்தார். அதில் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:
குடிநீருக்காக அல்லல்படும் டில்லி மக்களின் நிலையை 'டிவி'யில் பார்த்து மனம் வருந்தினேன்.
தாகத்துடன் வருபவருக்கு தண்ணீர் வழங்குவது நம் மரபு. டில்லிக்கு அண்டை மாநிலங்களிடம் இருந்து நீர் வருகிறது.
தேவையான நீர்
ஆனால், நமக்கு தேவையான தண்ணீரை ஹரியானா குறைவாகவே வழங்கியுள்ளது.
இரு மாநிலங்களிலும் இரு வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், இந்த நேரத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.