டில்லி பழைய ராஜிந்தர் நகரில் மாணவி தற்கொலை அம்பலம்
டில்லி பழைய ராஜிந்தர் நகரில் மாணவி தற்கொலை அம்பலம்
ADDED : ஆக 04, 2024 10:37 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், இங்குள்ள பயிற்சி மையத்தில் படித்து வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
டில்லி ராஜிந்தர் நகரிலு உள்ள ராஜ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் கடந்த வாரம் வெள்ளம் புகுந்தததில் இரண்டு மாணவியர் மற்றும் ஒரு மாணவர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் டில்லியில் இயங்கும் பயிற்சி மையங்களில் மாணவர்களின் நிலை குறித்து பெரும் கவலைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், கடும் மன அழுத்தம் காரணமாக ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் அகோலாவைச் சேர்ந்த 26 வயது பெண், நான்கு ஆண்டுகளாக டில்லி பழைய ராஜிந்தர் நகரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி மையம் ஒன்றில் படித்து வந்தார்.
இந்நிலையில், ஜூலை 21ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி டில்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'அரசுத் தேர்வுகளில் மோசடிகளைத் தடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கான விடுதி அறை வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி விடுங்கள்.' என கூறியுள்ளார்.
இதுகுறித்து, போலீஸ் துணைக் கமிஷனர் ஹர்ஷவர்தன் கூறியதாவது:
அந்தப் பெண் தங்கியிருந்த விடுதி அறையின் வாடகை சமீபத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வாடகையை ஆக.,5க்குள் செலுத்தாவிட்டால் அறையை காலி செய்யுமாறு விடுதி நிர்வாகமும் அழுத்தம் கொடுத்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.