ADDED : ஆக 12, 2024 07:21 AM

பெங்களூரு: பெங்களூரு கப்பன் பூங்காவில் பட்டு போன மரங்களை, வெட்டி அகற்ற வேண்டும் என்று, நடைபயிற்சியில் ஈடுபடுவோர், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பெங்களூரு விதான் சவுதாவுக்கு எதிரே, கப்பன் பூங்கா உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த பூங்காவில், ஏராளமான மரங்கள் உள்ளன. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட, இங்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.
காலை, மாலையில் பூங்காவிற்குள் பலர், நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். நடைபயிற்சி முடிந்த பின், மரங்கள் அடியில் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றனர்.
கப்பன் பூங்காவில் உள்ள, ஏராளமான மரங்கள் பல ஆண்டுகள் பழமையானது. தற்போது பெரும்பாலான மரங்கள் பட்டு போய் உள்ளன. எந்த நேரத்திலும் வேருடன் சாயும் நிலையில், மரங்கள் உள்ளன.
பெங்களூரில் இன்னும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. கனமழை பெய்ய ஆரம்பித்தால், பூங்காவில் உள்ள மரங்கள் முறிந்து விழும் நிலை ஏற்படலாம்.
காலை, மாலையில் மக்கள் நடைபயிற்சியில் ஈடுபடும் போது, மரம் முறிந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் கப்பன் பூங்காவில் பட்டு போன மரங்களை கண்டறிந்து, வெட்டி அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு, நடைபயிற்சியில் ஈடுபடுவோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.