பத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை
பத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை
ADDED : மார் 27, 2024 12:49 AM
புதுடில்லி,:'தலைநகர் டில்லியில் பத்திரிகை போட்டோகிராபர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்' என டில்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மற்றும் பிரஸ் கிளப் ஆப் இந்தியா ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் டில்லி படேல் சவுக்கில் நேற்று போராட்டம் நடத்தினர்.
அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் மற்றும் 'டிவி'கேமராமேன்கள் திரண்டிருந்தனர்.
போராட்டம் மற்றும் போலீஸ் நடவடிக்கை ஆகியவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சில போலீஸ் அதிகாரிகள் பத்திரிகையாளர்களை அடித்து விரட்டினர். மேலும், போட்டோ மற்றும் வீடியோ எடுத்தவர்களை கழுத்தை நெரித்து சரமாரியாகத் தாக்கினர்.
இந்தச் சம்பவம் 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பானது. இதனால், டில்லிவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரஸ் கிளப் ஆப் இந்தியா மற்றும் டில்லி யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் ஆகியவை, 'ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
பத்திரிகையாளர்களை தாக்கி விரட்டிய போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு டில்லி பத்திரிகையாளர் சங்கம் மனு அனுப்பியுள்ளது.

