திருமணமான பெண்ணை மதம் மாற்றியவருக்கு ஜாமின் மறுப்பு
திருமணமான பெண்ணை மதம் மாற்றியவருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : ஆக 23, 2024 06:13 AM
பெங்களூரு: திருமணமான பெண்ணை மதம் மாற்றியவருக்கு, ஜாமின் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பெலகாவி, சவுந்தட்டியை சேர்ந்தவர் ரபீக் லாலாசாப், 33. இவர் வீடு அமைந்துள்ள பகுதியில், தலித் சமூகத்தை சேர்ந்த திருமணமான பெண், மளிகை கடை நடத்தினார். அந்த கடைக்கு ரபீக் அடிக்கடி சென்றார். இதில் அவருக்கும், பெண்ணுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த பெண்ணின் கணவர் 2021ல் மனைவியை, அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பினார்.
பின், ஊர் பெரியவர்கள் சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைத்தனர்.
கள்ளத்தொடர்பை பெண் கைவிட்டார். ஆனாலும் ரபீக், பெண்ணை விடவில்லை.
தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி தொல்லை கொடுத்தார். கள்ளத்தொடர்பில் இருந்தபோது எடுத்த, ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டினார். பெண்ணை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரில், ரபீக் கைது செய்யப்பட்டு, பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மே மாதம் ஜாமின் கேட்டு, பெலகாவி நீதிமன்றத்தில் மனு செய்தார். ஜாமின் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி ராசய்யா விசாரித்தார்.
நேற்று நடந்த விசாரணையின் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராசய்யா, ''அப்பாவி ஏழை பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்.
''இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்தவும், பெண்கள், குழந்தைகளை பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்,'' என்று கூறி ரபீக்கின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

