ADDED : மே 29, 2024 04:45 AM

ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா பென்டிரைவ் வழக்கால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி உடையும் என, துணை முதல்வர் சிவகுமார் அதிகம் எதிர்பார்த்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு பொய்த்தது.
கர்நாடக லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்து, லோக்சபா தேர்தலை எதிர்கொண்டன. இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கும் என்பதை, காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. இது போட்டியை கடுமையாக்கியது.
எதிர்பார்ப்பு
பா.ஜ., - ம.ஜ.த., கைகோர்த்தாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என, முதல்வர் சித்தாரமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகிய இருவரும் நம்பினர். கர்நாடகாவில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் வரை, அனைத்தும் சுமுகமாக நடந்தது. கூட்டணி தலைவர்கள் பரஸ்பரம் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டனர். சில இடங்களில் தொண்டர்கள் இடையே, ஒற்றுமை இருக்கவில்லை என்றாலும், மற்ற இடங்களில் இணைந்து பணியாற்றினர்.
ஆனால் மே 7ல், இரண்டாம் கட்ட தேர்தல் நடப்பதற்கு முன்பு, ஹாசன் எம்.பி.,யும், கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி, பெரும் சூறாவளியை கிளப்பியது. பென்டிரைவ் வெளியாவதற்கு முன்பே, பிரஜ்வல் வெளிநாட்டுக்கு பறந்து விட்டார்.
அரசியல் சர்ச்சை
பென் டிரைவை அஸ்திரமாக பயன்படுத்தி, கூட்டணி கட்சிகளை பிரிக்க, காங்கிரஸ் முயற்சித்தது. இது அரசியல் சர்ச்சையாக மாறியது. 'பென்டிரைவ் விவகாரம், பா.ஜ., - ம.ஜ.த., இடையே பிரிவினையை ஏற்படுத்தும். கூட்டணி உடையும். கட்சிகள் தனியாக பிரியும்' என, ஆளுங்கட்சியினர் குஷியில் இருந்தனர். குறிப்பாக துணை முதல்வர் சிவகுமார், இவ்விஷயத்தில் ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் பா.ஜ., தலைவரும், வக்கீலுமான தேவராஜே கவுடா, புது குண்டை வீசி ஆளுங்கட்சியை கலங்கடித்தார். பென் டிரைவ் வெளியானதன் பின்னணியில், துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் எம்.பி., சிவராமேகவுடாவுக்கு தொடர்பு உள்ளது. பென் டிரைவை வெளியிட தன்னிடம் 100 கோடி ரூபாய் டீல் பேசினர். முன் பணமாக ஐந்து கோடி ரூபாய் அனுப்பினர் என, ஊடகத்தினர் முன்னிலையில் குற்றம் சாட்டினார். இது, பென்டிரைவ் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்துடன் ஆளும் காங்கிரஸ் வட்டாரத்தில் அமைதியை ஏற்படுத்தியது.
கணக்கு தவிடுபொடி
ஜூனில் நடக்கவுள்ள மேலவை தேர்தலில், இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடும். வரும் நாட்களில் தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து, பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., தனியாக போட்டியிட்டால், தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணக்கு போட்டனர். ஆனால், காங்கிரஸ் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.
பென்டிரைவ் வீடியோ வெளியானவுடன், பிரஜ்வல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அதில் தலையிட மாட்டோம் என, தேவகவுடா, குமாரசாமி தெளிவுபடுத்தினர். இருவருமே, இந்தியாவுக்கு திரும்பி, விசாரணை அதிகாரிகளிடம் சரணடையும்படி பிரஜ்வலை எச்சரித்தனர். இதற்கு பணிந்த பிரஜ்வல், நேற்று முன்தினம் வீடியோவை வெளியிட்டு, தனக்கு எதிராக சதி நடப்பதாக புலம்பினார்.
பிரஜ்வல் வழக்குக்கு பின், ஒக்கலிகர் ஆதரவு, ம.ஜ.த.,வில் இருந்து விலகி, காங்கிரசுக்கு கிடைக்கும். துணை முதல்வர் சிவகுமார் ஒக்கலிக சமுதாயத்தின், செல்வாக்குமிக்க தலைவர் ஆவார் என, காங்கிரசார் கருதினர். ஆனால் கூட்டணி முன்பை விட உறுதியானது.
பிரஜ்வல் நாடு திரும்பியவுடன் அடுத்த கட்ட காட்சி அரங்கேறும். ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின் புதிய காட்சிகளை பார்க்கலாம்.
- நமது நிருபர் -