பிஜு ஜனதா தள எம்.பி.,க்கு பலாத்கார மிரட்டல் விடுத்த தனியார் ஊழியர்
பிஜு ஜனதா தள எம்.பி.,க்கு பலாத்கார மிரட்டல் விடுத்த தனியார் ஊழியர்
UPDATED : ஆக 20, 2025 03:06 AM
ADDED : ஆக 20, 2025 03:04 AM

புவனேஸ்வர்: ஒடிஷாவில், பிஜு ஜனதா தள ராஜ்யசபா எம்.பி., சுலதா டி யோவை, 'பலாத்காரம் செய்து கொன்று விடுவேன்' என, 'மஹிந்திரா' நிறுவன ஊழியர் சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகார் பிஜு ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்.பி.,யாக இருப்பவர் சுலதா டியோ.
ஒடிஷாவை சேர்ந்த இந்த பெண் எம்.பி.,க்கு மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் ஊழியரான சத்யபிரதா நாயக் என்பவர், சமூக வலைதளத்தில், பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த நபரின் மிரட்டல் பதிவை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'மஹிந்திரா' நிறுவன உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா, பா.ஜ.,வை சேர்ந்த ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மஜி ஆகியோருக்கு எம்.பி., சுலதா டியோ அனுப்பி வைத்துள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
நாசிக்கில் பணியாற்றும் மஹிந்திரா நிறுவன ஊழியரும் பா.ஜ., தொண்டருமான சத்யபிரதா நாயக், என்னை பலாத்காரம் செய்து கொலை செய்வேன் என சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதான் இன்றைய நாட்டில் பெண்கள் நிலை.
நடவடிக்கை
பெண் எம்.பி.,க்கே இந்த நிலை என்றால் ஒடிஷாவில் உள்ள சாதாரண பெண்களின் நிலைமையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நான் அளித்த புகார் மீது, போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஒடிஷாவின், புரியைச் சேர்ந்த சிறுமியை மர்மநபர் கடத்திச் சென்று தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் குறித்து, ஒடிசாவில் ஆளும் பா.ஜ., அரசை சுலதா குற்றஞ்சாட்ட இருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ., தொண்டர், சுலதா டியோவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம், 'குற்றஞ்சாட்டப்பட்ட தங்கள் நிறுவன ஊழியர் சத்யபிரதா நாயக்கிடம் விசாரணை நடத்தி, தவறு செய்திருந்தால் தண்டனை வழங்கப்படும்' என, உறுதி அளித்து உள்ளது.