ADDED : ஏப் 25, 2024 04:17 AM
நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, 90. கர்நாடக முதல்வராகவும் இருந்தவர். ம.ஜ.த., என்ற கட்சியின் தேசிய தலைவராகவும் உள்ளார்.
ம.ஜ.த., கர்நாடகாவில் மாநில கட்சியாக உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தில், மாநில கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., கோலோச்சுவது போல், கர்நாடகாவில் ம.ஜ.த.,வால் கோலோச்ச முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம், துவக்கம் முதலே குடும்ப அரசியல். அத்துடன் பழைய மைசூரில் மட்டுமே, ம.ஜ.த.,வுக்கு அதிக செல்வாக்கு இருப்பது. மத்திய, வட, கடலோர மாவட்டங்களில் அக்கட்சிக்கு செல்வாக்கு கிடையாது.
ஏதாவது ஒரு தேர்தலில் அத்தி பூத்தார்போல், வடமாவட்டங்களில் எங்காவது ஒரு ம.ஜ.த., வேட்பாளர் வெற்றி பெறுவார். தமிழகத்தில் தி.மு.க.,வைப் போல கர்நாடகாவில் குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சி ம.ஜ.த.,
அரசியல் பட்டறை
தேவகவுடா தற்போது ராஜ்யசபா எம்.பி., ஆக உள்ளார். அவரது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா எம்.எல்.ஏ.,வாகவும், ஒரு பேரன் பிரஜ்வல் எம்.பி., ஆகவும், இன்னொரு பேரன் சூரஜ் எம்.எல்.சி., ஆகவும் உள்ளனர்.
'கட்சிக்காக என்ன தான் மாடு மாதிரி உழைத்தாலும், நமக்கு பதவி கிடைக்காது' என்பது, ம.ஜ.த., தொண்டர்களுக்கும் நன்கு தெரியும்.
ஆனாலும் தேவகவுடாவுக்காக கட்சியில் உள்ளனர். உண்மையை சொல்லப் போனால், ம.ஜ.த., கட்சி அரசியல் பட்டறை.
அங்கு இருக்கும் தலைவர்கள், அரசியல் நன்கு கற்றுக் கொண்டு, வேறு கட்சிக்கு சென்றுவிடுவர். முதல்வர் சித்தராமையா கூட ம.ஜ.த.,வில் இருந்து, தேவகவுடாவிடம் அரசியல் கற்றவர் தான்.
ம.ஜ.த.,வால் தேர்தலில் தனித்து வெற்றி பெற முடியாததால், ஒவ்வொரு தேர்தலின்போதும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன், கூட்டணி அமைத்து கொள்கிறது.
கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தவர்கள், இப்போது பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளனர். ஒரு காலத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசிய தேவகவுடா, இப்போது பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, மோடி செய்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசி வருகிறார்.
மக்களின் கஷ்டம்
தேவகவுடா, குமாரசாமி ஒவ்வொரு தேர்தல் களத்திலும் மக்களை சந்திக்கும்போது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடிப்பர். இதை காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல் செய்வர்.
கண்ணீர் தான் தேவகவுடா குடும்பத்தின் கடைசி ஆயுதம் என, முதல்வர் சித்தராமையா அடிக்கடி விமர்சித்து வருகிறார்.
தற்போதைய தேர்தல் பிரசாரத்தின் போதும், தேவகவுடா, குமாரசாமி, தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் கண்ணீர் வடித்து உள்ளனர்.
வழக்கம்போல கிண்டல் அடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தேவகவுடா குடும்பத்தினர் அவர்களின் ஆயுதத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்றனர்.
கடுப்பான தேவகவுடா குடும்பத்தினர், 'மக்கள்படும் கஷ்டத்தை பார்த்து, நாங்கள் கண்ணீர் சிந்துவதை காங்கிரசார் விமர்சிக்கின்றனர். எங்கள் கண்ணீரில் காங்கிரஸ் கரைந்து விடும்' என்று கூறுகின்றனர்.
தேவகவுடா வடிக்கும் கண்ணீருக்கு விலை கிடைக்குமா என்பதை, பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
- நமது நிருபர் -

