பேரிடர் செய்தி ஒளிபரப்பு 'டிவி' சேனல்களுக்கு உத்தரவு
பேரிடர் செய்தி ஒளிபரப்பு 'டிவி' சேனல்களுக்கு உத்தரவு
ADDED : ஆக 13, 2024 12:54 AM

புதுடில்லி, ஆக. 13-
இயற்கை பேரிடர், பெரிய விபத்து போன்ற சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடும் போது, பார்வையாளர்கள் பீதி அடையாமல் இருக்க, அது தொடர்பான காட்சிகளில், தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடும்படி, தனியார் செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தனியார் செய்தி சேனல் நிறுவனங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இயற்கை பேரிடர், ரயில் விபத்து போன்ற பெரிய சம்பவங்கள் குறித்து, செய்தி சேனல்கள் தொடர்ந்து செய்தி வெளியிடுகின்றன.
ஆனால், அந்த சம்பவம் எப்போது நடந்தது என்பதை குறிப்பிட சேனல்கள் மறந்து விடுகின்றன.
விபத்து நடந்து பல நாட்களுக்கு பின், செய்தி சேனல்களில் அது தொடர்பான காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால், இதை பார்க்கும் பார்வையாளர்கள், விபத்து தற்போது நடந்ததா அல்லது பழைய சம்பவமா என தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். மேலும் சிலர் பீதி அடைகின்றனர்.
எனவே, பார்வையாளர்களிடையே தவறான புரிதலை தவிர்க்க, இயற்கை பேரிடர், பெரிய விபத்துகள் போன்ற சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடும் போது, அது தொடர்பான காட்சிகளில், தேதி மற்றும் நேரத்தை, அனைத்து தனியார் செய்தி சேனல்களும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இதனால், சம்பவம் எப்போது நடந்தது என்பதை பார்வையாளர்கள் எளிதில் புரிந்து கொள்வர்.
இந்த உத்தரவை அனைத்து தனியார் செய்தி சேனல் நிறுவனங்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.