நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக அதிருப்தி சென்னை நபருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்
நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக அதிருப்தி சென்னை நபருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்
ADDED : ஆக 30, 2024 02:47 AM
புதுடில்லி: நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் வீம்புக்கு வழக்கு தொடர்ந்ததாக, சென்னையைச் சேர்ந்தவருக்கு, 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையைச் சேர்ந்த ரகோத்தமன் மற்றும் அவருடைய மனைவி, கட்டுமானப் பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அடமானம்
இவர்கள், 1995ல் கோவர்தன் என்பவரிடம் இருந்து, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இதற்காக, தங்களுடைய சொத்து பத்திரத்தை பிணையாக கொடுத்திருந்தனர்.
இங்குதான் பிரச்னை துவங்கியது. இது தொடர்பாக விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு, 2010ல் அளித்த உத்தரவில், தன் சொத்து பத்திரத்தின் அடிப்படையில் கூட்டு அடமானத்துக்கு ரகோத்தமன் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
ஆனால், அதன்படி, கோவர்தன் கூட்டு அடமானம் செய்யவில்லை.
ரகோத்தமன் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த, உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, கூட்டு அடமானம் செய்யாத கோவர்தனுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, கோவர்தன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஹீமா கோஹ்லி, அசானுதீன் அமானுல்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமர்வு கூறியுள்ளதாவது:
தங்களுக்கு நீதி கேட்டு, இதுபோன்று பலர் வழக்கு தொடர்கின்றனர். இவர்கள், நீதிமன்றங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.
நடவடிக்கை
இதுபோன்ற வீண் விபரீத முயற்சியில் ஈடுபட்டு, வீம்புக்கு வழக்குகள் தொடர்கின்றனர். இதை உயர் நீதிமன்றமே நிராகரித்திருக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ள கோவர்தனுக்கு, 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதை ஆறு வாரங்களுக்குள், உயர் நீதிமன்ற கருவூலத்தில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் தகுந்த நடவடிக்கையை அவர் எதிர்கொள்ள நேரிடும்.
இந்த அபராதத் தொகையை, சிறார் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் உதவியாளர்கள் நல அமைப்பு, உயர் நீதிமன்ற சட்ட சேவை குழுவுக்கு தலா, 40,000 ரூபாயாக பகிர்ந்தளிக்க வேண்டும். அதை எவ்வாறு செலவிடுவது என்பதை உயர் நீதிமன்றமே முடிவு செய்யலாம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

