ADDED : ஏப் 14, 2024 07:04 AM

தார்வாட்: பா.ஜ., வேட்பாளர் பிரஹலாத் ஜோஷிக்கு எதிராக, தார்வாட் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட தயாராகும் திங்களேஸ்வரா சுவாமிகள் மீது, பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில், தார்வாட் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு, பா.ஜ., சீட் வழங்கிஉள்ளது. இவர் லிங்காயத் உட்பட மற்ற சமுதாயத்தினரை அலட்சியப்படுத்துகிறார்.
வேட்புமனு தாக்கல்
இவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என, சிரஹட்டி மடத்தின் திங்களேஸ்வரா சுவாமிகள் வலியுறுத்தினார். இதை பொருட்படுத்தாமல், பிரஹலாத் ஜோஷிக்கு பா.ஜ., சீட் கொடுத்தது.
இதனால் அதிருப்தியடைந்த திங்களேஸ்வரா சுவாமிகள், தார்வாட் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து உள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் செய்யவும் தயாராகிறார். இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.
சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க, சமீபத்தில் இவர் கூட்டம் நடத்தினார். இவர் அரசியலுக்கு வருவதை விரும்பாத பக்தர்கள், இவரது கூட்டத்துக்கு வரவில்லை.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திங்களேஸ்வரா சுவாமிகளை சிரஹட்டி மடத்தின் வாரிசாக்கினோம். ஆனால் இவர் அரசியல் செய்கிறார்.
ஆன்மிக சேவை
இவரை மடத்தின் வாரிசாக்கியது, ஆன்மிக சேவைக்கு தானே தவிர, அரசியல் செய்வதற்காக அல்ல.
இவருக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால், மடத்தைவிட்டு வெளியேறி அரசியல் செய்யட்டும். மடம் ஆன்மிக உணர்வின் அடையாளமாக பிரசித்தி பெற்றது. இங்கிருந்து அரசியல் செய்வது சரியல்ல.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

