பா.ஜ.,வில் அதிருப்தியாளருக்கு தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பதவி
பா.ஜ.,வில் அதிருப்தியாளருக்கு தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பதவி
ADDED : மார் 30, 2024 02:54 AM

தாவணகெரே: 'சீட்' எதிர்பார்த்து கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த ரேணுகாச்சார்யாவுக்கு, தாவணகெரே தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தாவணகெரே லோக்சபா தொகுதியில் போட்டியிட பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா விருப்பம் தெரிவித்திருந்தார். அத்துடன், 'சித்தேஸ்வருக்கு சீட் வழங்கக் கூடாது. வழங்கினால் பிரசாரம் செய்ய மாட்டோம்' என கூறி வந்தார்.
கட்சி மேலிடமோ, சித்தேஸ்வருக்கு பதிலாக, அவரது மனைவி காயத்ரிக்கு சீட் வழங்கியது. இதனால் அதிருப்தி அடைந்த ரேணுகாச்சார்யா, தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
இதையறிந்த கட்சி மேலிடம், ரேணுகாச்சார்யாவை சமாதானப்படுத்த எடியூரப்பாவை அனுப்பியது. அவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்தார்.
ரேணுகாச்சார்யா தரப்பில், 'தேர்தல் பொறுப்பில் உயர் பதவி வழங்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. கட்சியும் இதற்கு ஒப்புக் கொண்டதால், அவர் சமாதானம் அடைந்தார்.
தற்போது தாவணகெரே லோக்சபா தொகுதி தேர்தல் பொறுப்பாளராக ரேணுகாச்சார்யாவை நியமித்து, மேலிட தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
பா.ஜ., வேட்பாளர் காயத்ரி சித்தேஸ்வரின் வெற்றிப் பொறுப்பு, ரேணுகாச்சார்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

