தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் மேகதாது அணைக்கு தடை கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தர்மசங்கடம்
தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் மேகதாது அணைக்கு தடை கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தர்மசங்கடம்
ADDED : மார் 22, 2024 07:00 AM
பெங்களூரு: 'லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மேகதாது அணை கட்ட விடமாட்டோம்' என, தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க., உறுதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு, கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே, மேகதாது விவாதம் பல ஆண்டுகளாக உள்ளது. ராம்நகரின், மேகதாது அருகில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டம் வகுத்துள்ளது.
திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, அனுமதிக்காக காத்திருக்கிறது. திட்டம் செயல்படுத்தப்பட்டால், வீணாகும் மழைநீரை சேமிக்கலாம். இது இரண்டு மாநிலங்களுக்கும் உதவியாக இருக்கும் என, கர்நாடக அரசு கருதுகிறது.
காங்கிரஸ் நெருக்கடி
இதற்கு முன் மாநிலத்தில், பா.ஜ., அரசு இருந்த போது, மேகதாது திட்டத்தை செயல்படுத்தும்படி, காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. அதுமட்டுமின்றி மாநில காங்., தலைவர் சிவகுமார் தலைமையில் போராட்டம் நடத்தியது. 2023 சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும், மேகதாது திட்டம் செயல்படுத்தப்படும் என, காங்கிரஸ் உறுதி அளித்தது.
கட்சி பெரும்பான்மையுடன் அரசு அமைத்த பின், நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சிவகுமார், மேகதாது திட்டத்தை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளார்.
இது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் கூட, மேகதாது திட்டம் இடம்பெற்றது.
இந்நிலையில் தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க., அரசு, நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதில், 'மத்தியில் இண்டியா கூட்டணி அரசு வந்தால், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்' என ஸ்டாலின் அரசு உறுதி அளித்துள்ளது. இது மேகதாது அணையை கட்டியே தீருவோம் என, உறுதி அளித்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசை, தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
பின்னடைவு
ஏனென்றால், 'இண்டியா' கூட்டணியில், காங்கிரஸ் முக்கியமான கட்சியாகும். தி.மு.க., தேர்தல் அறிக்கையால், கர்நாடகாவில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன், சிவகுமார் தலைமையில், 'நமது நீர் நமது உரிமை' என, பெரிய அளவில் பாதயாத்திரை நடத்தியது. இப்போது காங்கிரசின் கூட்டணி கட்சியே, மேகதாது அணைக்கு தடை போடுவோம் என, கூறியதன் மூலம், கர்நாடக பா.ஜ.,வுக்கு அஸ்திரத்தை கொடுத்துள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் கூறியதாவது:
தமிழக அரசு, தன் மாநிலத்தில், என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மேகதாது அணையை கட்ட வேண்டும் என்ற உறுதி பூண்டு, நீர்ப்பாசன துறை பொறுப்பை ஏற்றேன். அவர்கள் போராட்டம் நடத்தட்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, தண்ணீர் பிரச்னை குறித்து, நன்றாக தெரியும். ஆணையம் நமக்கு நியாயத்தை கொடுத்தே ஆக வேண்டும். நீதிமன்றத்திலும் நமக்கு நியாயம் கிடைக்கும்.
இரு மாநிலங்கள்
மேகதாது திட்டம், வெறும் கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல. இரண்டு மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் பல்வேறு மாநிலங்களின் மக்கள், கர்நாடகாவில் வசிக்கின்றனர்.
குறிப்பாக பெங்களூரில் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்கும் நோக்கில், மேகதாது அணை கட்டப்படும். தமிழகம், மேகதாது திட்டத்துக்கு ஆதரவாக பேசும் நல்ல காலம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், இத்தகைய அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை. இதை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது. மேகதாது திட்டம் நமது உரிமை. கர்நாடகா எவ்வளவு நீரை, தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்பதை, காவிரி நடுவர் தீர்ப்பாயம் தெளிவாக கூறியுள்ளது.
மழை அதிகமாக பெய்யும் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வீணாகும் தண்ணீரை, மேகதாது அணை கட்டி சேமிக்கலாம்.
கஷ்ட காலத்தில் இந்த நீரை பயன்படுத்தலாம். கர்நாடகா, தமிழகத்துக்கும் உதவியாக இருக்கும். கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ், இண்டியா கூட்டணியில் உள்ள தி.மு.க.,வுக்கு உணர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இண்டியா கூட்டணியின் அங்கமான, தமிழக தி.மு.க., அரசு, மேகதாது அணை கட்ட விட மாட்டோம் என, அறிவித்திருப்பது வருத்தம் அளிக்கிறது. அம்மாநில முதல்வர் ஸ்டாலின் செயலை கண்டிக்கிறேன். பெங்களூருக்கு குடிநீர் வழங்கும் ஒரே நோக்கில், மேகதாது திட்டம் வகுக்கப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டினால், 65 முதல் 66 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்கலாம். இந்த திட்டத்துக்கு தி.மு.க., முட்டுக்கட்டை போடுகிறது.
- முக்கிய மந்திரி சந்துரு,
மாநில தலைவர், ஆம் ஆத்மி

