ADDED : ஜூலை 06, 2024 06:15 AM

ஆடுகோடி: ''இடமாற்றம் கோரி சிபாரிசு கடிதம் கொண்டு வந்து, நெருக்கடி கொடுக்காதீர்கள்,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்த், போலீசாரை எச்சரித்தார்.
பெங்களூரு, ஆடுகோடியின் சி.ஏ.ஆர்., மைதானத்தில் நேற்று போலீஸ் அணிவகுப்பு மரியாதையை, நகர போலீஸ் கமிஷனர் தயானந்த் ஏற்றுக்கொண்டார். இதில் அவர் பேசியதாவது:
பதவி உயர்வு அல்லது இடமாற்றம் குறித்து, சிபாரிசு கொண்டு வராதீர்கள். நெருக்கடி கொடுக்காதீர்கள். இடமாற்றம், பதவி உயர்வு கவுன்சிலிங் மூலம் நடக்கும். எந்த ஆசை வார்த்தைகளுக்கும் பணியாதீர்கள். இடமாற்றம் பட்டியல் தயாராகிறது. நமது துறை மட்டுமின்றி, மற்ற துறைகளிலும் இடமாற்றம் நடக்க உள்ளது.
பணிகள் தீவிரம்
ஏற்கனவே ஏ.எஸ்.ஐ., அளவிலான அதிகாரிகளுக்கு, எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமை ஏட்டுகள் ஏ.எஸ்.ஐ.,யாகவும், ஏட்டுகள் தலைமை ஏட்டுகளாகவும் பதவி உயர்வு அளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சமீப நாட்களாக, சில வழக்குகளின் விசாரணையால், போலீசாரின் பணித்திறன் பாராட்டப்படுகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். நகரின் அனைத்து இடங்களிலும், போலீஸ் அதிகாரிகள், ஊழியர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. ஒருங்கிணைந்து பணியாற்றியதற்கு, இதுவே சாட்சியாகும்.
குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில், திறமையை காண்பிக்க வேண்டும். செயின் பறிப்பு, சொத்து மோசடி, வீடுகளில் திருட்டு, மொபைல் பறிப்பு புகார்களுக்கு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்களை இழந்தவர்கள், மனம் வருந்துகின்றனர். இவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
குற்றவாளிகளை கண்டு பிடித்து, கைது செய்யாவிட்டால், வரும் நாட்களில் அவர்கள் பெரிய குற்றவாளிகள் ஆவதை தடுக்க முடியாது. புகார் அளிக்க போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம், பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். உரத்த குரலில் பேச வேண்டாம்.
புதிதாக அமலுக்கு வந்துள்ள, மூன்று புதிய சட்டங்களை, போலீசார் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டங்களில் குளறுபடி நடக்காமல், கவனத்துடன் பின்பற்ற வேண்டும். ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், உயர் அதிகாரிகளிடம் தகவல் கேட்டறியுங்கள்.
அணிவகுப்பு
மாதந்தோறும் அணிவகுப்பு நடக்கிறது. அனைத்து போலீசாரும் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும். போக்குவரத்து நிர்வகிப்பு, இரவு ரோந்து, போலீஸ் நிலைய அன்றாட பணிகளுடன், அணிவகுப்பிலும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.