ADDED : ஆக 16, 2024 10:25 PM
நிர்மான் பவன்:டில்லி மருத்துவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்ந்தது.
கோல்கட்டாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, டில்லியில் உள்ள மருத்துவர்கள், அந்தந்த மருத்துவமனைகளுக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நிர்மான் பவனுக்கு வெளியே டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவக்கினர். நேற்று ஐந்தாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
சாலையோரத்தில் நின்று போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர். கைகளில் எதிர்ப்பு பேனர்களை ஏந்தி, கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
'எங்களுக்கு நீதி வேண்டும், பாதுகாப்பு இல்லை, கடமை இல்லை' உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, தங்களின் பாதுகாப்பு குறித்த கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்துகின்றனர்.
சுதந்திர தினத்தை ஒட்டி, எய்ம்ஸ், எஸ்.ஐ.எச்., ஆர்.எம்.எல்., எல்.எச்.எம்.சி., யு.சி.எம்.எஸ்., டி.டி.யு., உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மருத்துவர்கள் சங்கங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி நேற்று போராட்டம் நடந்தது. அத்துடன் இந்தியா கேட்டில் நேற்று மாலை மெழுவர்த்தி ஏந்தி பயிற்சி டாக்டர்கள் பேரணி நடத்தினர்.
டில்லி பல்கலைக்கழகத்தின் சங்கத்தினர் நேற்று மண்டி ஹவுஸில் கண்டன கூட்டத்தை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு சார்பில் ஜந்தர் மந்தரில் நேற்றிரவு போராட்டம் நடத்தப்பட்டது.

