ADDED : ஜூன் 25, 2024 04:45 AM

சித்ரதுர்கா : ''வால்மீகி மேம்பாட்டு வாரியத்தில் 187 கோடி ரூபாய் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு, நிதியமைச்சராக உள்ள முதல்வர் சித்தராமையா பதிலளிக்க வேண்டும்,'' என, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., திப்பேசாமி வலியுறுத்தியுள்ளார்.
சித்ரதுர்கா மாவட்டம், ஹொசதுர்காவில் நேற்று நடந்த பா.ஜ., - எஸ்.டி., மோர்ச்சா மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது முன்னாள் எம்.எல்.ஏ., திப்பேசாமி பேசியதாவது:
தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும், எஸ்.டி., சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 187 கோடி ரூபாயை, அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி உள்ளனர்.
அரசின் தலையீடு இல்லாமல் இவ்வளவு பெரிய பொருளாதார ஊழல் எப்படி சாத்தியம்? இப்பணத்தை எந்த வளர்ச்சிக்கு பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை சொல்ல வேண்டும்.
எஸ்.டி., சமுதாயத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, தெலுங்கானா, ஆந்திரா மாநில தேர்தலுக்கு பயன்படுத்தியது சரி தானா? இது வால்மீகி சமுதாய மக்களுக்கு மாநில அரசு செய்த அநீதி.
வால்மீகி மேம்பாட்டு வாரியத்தின் 187 கோடி ரூபாய் சட்டவிரோத பணம் பரிமாற்றத்துக்கு, நிதியமைச்சராக உள்ள முதல்வர் சித்தராமையா பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.