முதல்வருக்கு குண்டர்கள் தேவையா? வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்
முதல்வருக்கு குண்டர்கள் தேவையா? வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்
ADDED : ஆக 01, 2024 01:27 PM

புதுடில்லி: ஆம்ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் டில்லி முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் காட்டமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
டில்லி ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி., ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை, கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது, வன்கொடுமை, கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஸ்வாதி மாலிவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மூலம், அவர் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கில் ஜாமின் கோரி பிபவ் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டில்லி ஐகோர்ட் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 01) நீதிபதிகள் சூர்ய காந்த், தீபன்கர் தட்டா மற்றும் உஜால் புயான் ஆகியார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர்.
முதல்வரின் பங்களா தனியாருக்கு சொந்தமானதா? முதல்வர் அலுவலகத்திற்கு குண்டர்கள் தேவைப்படுகிறார்களா? தாக்குவதை நிறுத்தச் சொல்லி மாலிவால் கூறியும், நீங்கள் தொடர்ந்து அடித்துள்ளீர்கள். என்ன நினைத்து இப்படி செய்தீர்கள்? அதிகாரம் உங்களிடம் இருப்பதாக தலைக்கனமா? நீங்கள் முன்னாள் செயலாளர் தான். பாதிக்கப்பட்ட பெண் அங்கு இருப்பதற்கு உரிமை இல்லை எனில், உங்களுக்கும் அங்கு இருப்பதற்கான உரிமை இல்லை, என்று கோபமாகக் கூறினர்.