பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா: இந்திய ராணுவம் பகிர்ந்த பழைய செய்தி வைரல்
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா: இந்திய ராணுவம் பகிர்ந்த பழைய செய்தி வைரல்
ADDED : ஆக 05, 2025 10:13 PM

புதுடில்லி: 1954 முதல் 1971 வரை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 200 கோடி டாலர் அளவுக்கு ஆயுதங்கள் வழங்கியது தொடர்பாக அப்போது வெளியான நாளிதழின் செய்தியை இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா உடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக வரி விதித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்தியம் சார்பில் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் 1971ம் ஆண்டு ஆக.,5 ல் வெளியான நாளிதழ் ஒன்றின் நகலை வெளியிட்டு உள்ளது. அதில் பாகிஸ்தானுக்கு ராணுவ போர் விமானங்கள், ஏவுகணைகள், டாங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பீரங்கிகள் வழங்கப்பட்டது குறித்து விவரிக்கப்பட்டு உள்ளது.
அந்த நாளிதழில் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் விசி சுக்லா, பார்லிமென்டில் வங்கதேசம் உருவான பிறகு, பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில்ஆயுதங்கள் வழங்கியது குறித்த விவரித்தது இடம்பெற்றுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு உற்பத்தி துறைக்கான அமைச்சர் விசி சு்லா ராஜ்யசபாவில் கூறும்போது, பாகிஸ்தான் ஆயுதங்களை குவித்த வருவதை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசம் உருவான பிறகு, பாகிஸ்தானுக்கு கிடைத்த ஆயுதங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை. பாகிஸ்தானுக்கு அதிகளவு ஆயுதங்களை சீனா வழங்கி உள்ளது. 1954 முதல் பாகிஸ்தானுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி உள்ளது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.