இஷ்டப்பட்ட ஹோட்டலில் நிறுத்தக் கூடாது! டிரைவர்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., உத்தரவு
இஷ்டப்பட்ட ஹோட்டலில் நிறுத்தக் கூடாது! டிரைவர்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., உத்தரவு
ADDED : ஜூன் 04, 2024 04:49 AM

பெங்களூரு, 'கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் தொலை துாரம் செல்லும்போது, பயணியர் சாப்பிடவும், கழிப்பறைக்குச் செல்லவும் நிர்ணயித்த இடங்களில் மட்டுமே பஸ்களை நிறுத்த வேண்டும். இந்த விதிகளை மீறினால் பயணியர் புகார் செய்யலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
அபராதம்
தொலை துாரம் பயணிக்கும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் வழியில் 10 முதல் 15 நிமிடம் வரை, பயணியர் சாப்பிடவும், இயற்கையின் உந்துதலை கழிக்கவும் பஸ்களை நிறுத்த வேண்டும். இதற்கு தேவையான வசதிகள் கொண்ட ஹோட்டல்களுடன், கே.எஸ்.ஆர்.டி.சி., ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஹோட்டல்களில், உணவு, சிற்றுண்டிக்கு, அதிக தொகை பெற்றால், கழிப்பறைக்கு கட்டணம் வசூலித்தால், உணவு தரமாக இல்லையென்றால், பயணியர் புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட ஹோட்டலுடன் செய்துள்ள ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அபராதம் வசூலிப்பதுடன், அங்கு பஸ்களை நிறுத்த வேண்டாம் என, ஓட்டுனர்களுக்கு உத்தரவிடப்படும்.
ஒப்பந்தத்தை புதுப்பிக்கும்போது, ஹோட்டல்களில் ஆய்வு செய்யப்படும். துாய்மை, உணவின் தரம் மற்ற அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும். திருப்தியாக இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் நீடிக்கும். மாதந்தோறும் அதிகாரிகள், அவரவர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
பயணியரிடம் இருந்து, புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹோட்டல் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள், அந்தந்த ஹோட்டல்களில் உணவு விலை பட்டியல், கே.எஸ்.ஆர்.டி.சி.,யிடம் பெற்றுள்ள சான்றிதழை போட்டோ எடுத்து, மத்திய அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
நடவடிக்கை
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, உணவுக்கு பணம் பெறப்படுகிறதா என்பதை, உறுதிப்படுத்த வேண்டும். அதேபோன்று நிர்ணயித்த ஹோட்டல்களுக்கு பதில், வேறு ஹோட்டல், தாபாக்களில் நிறுத்தினால் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, வழியில் நிறுத்தப்படும் ஹோட்டல் பற்றிய விபரங்கள் அச்சிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.