மோடி துாதராக ரஷ்யா செல்லும் தோவல்: உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
மோடி துாதராக ரஷ்யா செல்லும் தோவல்: உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
ADDED : செப் 09, 2024 03:39 AM

புதுடில்லி : 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். அப்போது, ரஷ்யா- - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சை துவங்குவது குறித்து, ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், எகிப்து, எத்தியோப்பியா உள்ளிட்ட 10 நாடுகள் அடங்கியது 'பிரிக்ஸ்' அமைப்பு. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடு ரஷ்யாவில் நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக, செப்., 10 மற்றும் 11 தேதிகளில் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேச்சு
அப்போது, ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து, உக்ரைன் போர் தொடர்பாக அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி, சமீபத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சென்றபோது, போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து, 'இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்தியா முயற்சித்தால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்' என, ரஷ்ய அதிபர் புடின் சமீபத்தில் தெரிவித்தார். உக்ரைன் முனைப்புடன் இருந்தால், அமைதிப் பேச்சை தொடர தயார் என்றும் புடின் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில், அஜித் தோவலின் ரஷ்ய பயணத்தின் போது, அமைதிப் பேச்சை துவக்குவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முயற்சி
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்து பேசிய இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ''இந்தியா மற்றும் சீனா முயற்சித்தால் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்,'' என, தெரிவித்துள்ளார்.