ADDED : ஆக 10, 2024 11:14 PM
துமகூரு: பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று, நகைக்காக திருடர்கள் கொன்றதாக நாடகம் ஆடிய கணவர், கொழுந்தனுக்கு, துமகூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
துமகூரு டவுன் பாண்டுரங்க நகரை சேர்ந்தவர் மகேஷ், 30. இவரது மனைவி தேவிகா, 26. இவர்களுக்கு 2013ல் திருமணம் நடந்தது. 2015 முதல் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி, மனைவியை மகேஷ் துன்புறுத்தினார்.
இதற்கிடையில் மகேஷுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். அந்த பெண்ணை, மகேஷ் திருமணம் செய்ய நினைத்தார். விவாகரத்துத் தரும்படி தேவிகாவிடம் வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்தார்.
கடந்த 2019 ஏப்ரல் 6ம் தேதி, ஷிரா அருகே முகனஹள்ளி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு தேவிகா சென்றார். சொந்த ஊர் செல்ல, பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்றார். அங்கு வந்த மகேஷ், அவரது தம்பி ரவீஷ், 25, ஆகியோர், தேவிகாவின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தனர். அவர் அணிந்திருந்த நகையை, ரவீஷ் எடுத்துக் கொண்டார்.
நகைக்காக தேவிகாவை மர்ம நபர்கள் கொலை செய்ததாக, மகேஷும், ரவீஷும் நாடகம் ஆடினர். ஆனால் இருவரும் சேர்ந்து, தேவிகாவை கொன்றது, விசாரணையில் தெரிய வந்தது. கல்லம்பெல்லா போலீசார் கைது செய்தனர்.
இருவர் மீதும் துமகூரு 2வது மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஐந்து ஆண்டுகள் நடந்த, வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் நீதிபதி ஆனந்த் தீர்ப்பு கூறினார்.
“தேவிகாவை, மகேஷும், ரவீஷும் திட்டமிட்டு கொலை செய்தது நிரூபணம் ஆகி உள்ளது. இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது,” என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.