குறைந்த சம்பளம் வழங்குவதால் 'ஏசி' பஸ்கள் இயக்க டிரைவர் மறுப்பு
குறைந்த சம்பளம் வழங்குவதால் 'ஏசி' பஸ்கள் இயக்க டிரைவர் மறுப்பு
ADDED : பிப் 22, 2025 10:39 PM
பெங்களூரு : பி.எம்.டி.சி.,யின் மின்சார 'ஏசி' பஸ்களை இயக்குவதற்கு டிரைவர்கள் இல்லாததால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
போக்குவரத்துக்கு பெயர் பெற்ற நகரமான பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பி.எம்.டி.சி., பஸ்களின் பங்கு முக்கியமானது. இந்த பஸ்கள் வெளியிடும் புகையால் காற்று மாசுபடுதல் அதிகரித்தது.
இதனால், சில ஆண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு மின்சார ஏசி பஸ்களை, மாநில அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த பஸ்களில் பல வசதிகள் செய்யப்பட்டு வந்தன. இந்த ஆண்டு துவக்கத்தில், பி.எம்.டி.சி., நிர்வாகம் 320 மின்சார ஏசி பஸ்களை அறிமுகப்படுத்தியது. இந்த பஸ்கள் அனைத்தும் அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து, 12 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வாங்கப்பட்டது. சமீபத்தில், ஐந்து பஸ்களின் சோதனை ஓட்டம் நல்ல முறையில் முடிந்தது.
இந்த பஸ்களுக்கு ஓட்டுநர்கள், ஒப்பந்த அடிப்படையிலும், நடத்துநர்கள் பி.எம்.டி.சி., மூலமும் நியமிக்கப்படுகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு மாத சம்பளமாக 18,000 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு சராசரியாக மாத சம்பளம் 35,000 முதல் 40,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஏசி பஸ்களில், டிரைவர்களாக பணிபுரிவதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால், பஸ்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது,
மின்சார ஏசி பஸ்களுக்கு நடத்துநர்கள் மட்டுமே பி.எம்.டி.சி., மூலம் நியமிக்கப்படுகின்றனர். இத்திட்டத்திற்கு, சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக மானியத்தை வழங்குகிறது. இதை வைத்துக் கொண்டு பஸ் நிறுவனம், டிரைவர்களை நியமிக்கிறது.
மானிய தொகையை நேரடியாக மாநில அரசிற்கு கொடுத்தால் நன்றாக இருக்கும். இது பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேச உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.