ADDED : மே 23, 2024 10:21 PM

பெங்களூரு: 'ரேவ் பார்ட்டி' யில் பங்கேற்ற, இரண்டு தெலுங்கு நடிகையர் உட்பட 86 பேர், போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்து உள்ளது. இதனால் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு ரூரல் ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த 19 ம் தேதி இரவு 'ரேவ் பார்ட்டி' நடந்தது. போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி, சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர்.எம்.டி.எம்.ஏ., ஹைட்ரோ கஞ்சா, கோகைன் ஆகிய போதைப் பொருட்கள் சிக்கின.
விருந்திற்கு ஏற்பாடு செய்த நாகபாபு, 32, அருண்குமார், 35, வாசு, 35, ரனதீர், 43, முகமது அபுபக்கர் சித்திக், 29 ஆகிய, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பண்ணை வீட்டில் இருந்த, தெலுங்கு நடிகை ஹேமா உட்பட 101 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அவர்களின் ரத்தம், முடி மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வெளியான ஆய்வின் முடிவில் 86 பேர், போதைப் பொருள் உட்கொண்டது தெரிந்து உள்ளது.
இதில் 59 பேர் ஆண்கள். 27 பேர் பெண்கள். தெலுங்கு நடிகையர் ஹேமா, ஆஷி ராயும் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்து உள்ளது.
இதையடுத்து 86 பேருக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்க, சி.சி.பி., போலீசார் தயாராகி வருகின்றனர். இதனால், நடிகையர் உட்பட 86 பேருக்கும், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.