உயர்கிறது துாத்பேடா, ஐஸ்கிரீம் விலை முதல்வர் போட்டோவை அச்சிட்டு நுாதன எதிர்ப்பு
உயர்கிறது துாத்பேடா, ஐஸ்கிரீம் விலை முதல்வர் போட்டோவை அச்சிட்டு நுாதன எதிர்ப்பு
ADDED : ஜூன் 28, 2024 11:01 PM

பெங்களூரு: நந்தினி பால் விலை உயர்வு எதிரொலியால், தார்வாட் பேடா, துாத்பேடா உட்பட, பாலில் தயாரிக்கப்படும் இனிப்பு பண்டங்களின் விலை உயர்த்தப்படுகிறது.
கர்நாடகாவில் நந்தினி பாலின் அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாக்கெட்டுகளில், 50 மில்லி கூடுதல் பால் சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே பால் விலையை 2 ரூபாய் அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இது மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.
இனிப்புகள்
பால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் துாத்பேடா, தார்வாட் பேடா, ஐஸ்கிரீம், மில்க் ஷேக் உட்பட மற்ற இனிப்புகளின் விலையை உயர்த்த, கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஒரு லிட்டர் ஐஸ்கிரீம் பாக்ஸ் விலை 10 முதல் 15 ரூபாய் வரையிலும், மில்க் ஷேக்குகளின் விலை 5 முதல் 10 ரூபாய் வரையிலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
ஹோட்டல்கள், ஜூஸ் கடைகளில் விற்கப்படும் மில்க் ஷேக், ஐஸ்கிரீம்களை பால் இல்லாமல் தயாரிக்க முடியாது. விலையை உயர்த்துவது கட்டாயம் என, ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
பேக்கரிகளில் தயாரிக்கும் இனிப்பு பண்டங்களுக்கு, பால் தேவைப்படுகிறது. பால் இல்லாமல் இனிப்புகள் தயாரிப்பது கஷ்டம். எனவே இனிப்புகளின் விலையை அதிகரிக்க, பேக்கரி உரிமையாளர்கள் தயாராகின்றனர்.
பேக்கரி உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''பிஸ்தா ரோல், மில்க் கேக், மில்க் பர்பி, துாத்பேடா, தார்வாட் பேடா விலை, தற்போது கிலோவுக்கு 400 ரூபாயாக உள்ளது. பால் விலை உயர்த்தப்பட்டதால், 20 முதல் 25 ரூபாய் அதிகரிக்கப்படும்,'' என்றார்.
கூடுதல் சுமை
ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் சந்திரசேகர் ஷெட்டி கூறியதாவது:
தினமும் எங்கள் ஹோட்டலில், மில்க் ஷேக் தயாரிக்க 25 லிட்டர் பால் வாங்குகிறோம். காபி, டீக்கு 100 லிட்டர் பால் வாங்குகிறோம். பால் விலை உயர்த்தியதால், இந்த சுமையை எங்களால் சுமக்க முடியாது.
வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டி வரும். 65 ரூபாயாக இருந்த மில்க் ஷேக்கின் விலையை 70 ரூபாயாக அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நான்கு லிட்டர் ஐஸ்கிரீம் கிரீம் விலை, 470 முதல் 480 ரூபாயாக இருந்தது. தற்போது லிட்டருக்கு 10 முதல் 12 ரூபாய் வரை உயர்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பால் விலையை உயர்த்தியதை பா.ஜ., அஸ்திரமாக பயன்படுத்துகிறது. பால் பாக்கெட் மீது, முதல்வர் சித்தராமையா போட்டோவை போட்டுள்ளது. விலை உயர்வுக்கு எதிராக குரல் எழுதியுள்ளது. இது சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.
'எக்ஸ்' சமூக வலைதளத்தில், பா.ஜ., கூறியுள்ளதாவது:
வாக்குறுதித் திட்டங்களின் பெயரில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் இந்த திட்டங்களே, இப்போது அரசுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. வாக்குறுதித் திட்டங்களுக்கு, நிதி திரட்ட முடியாமல் அரசு திணறுகிறது. இதற்காக பல வழிகளை தேடுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.