ADDED : ஜூன் 08, 2024 11:49 PM

திருச்சூர்: கேரளாவின் திருச்சூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றது, அம்மாநில காங்கிரசில் கோஷ்டி பூசலை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றிக் கணக்கு
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, 18; ஆளும் மார்க்.கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ., தலா ஒரு தொகுதியில் வென்றன.
திருச்சூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி, 70,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் வாயிலாக, கேரளாவில் தன் முதல் வெற்றிக் கணக்கை பா.ஜ., துவங்கி சாதனை படைத்தது.
சுரேஷ் கோபியை எதிர்த்து காங்., சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவர் கே.முரளீதரன், மூன்றாம் இடம் பிடித்தார்.
சர்ச்சை
இதனால் அதிருப்தி அடைந்த அவர், இனி வரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்றும், பொதுவாழ்வில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்கப் போவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதற்கிடையே, 'முரளீதரனின் தோல்விக்கு, திருச்சூர் மாவட்ட காங்., தலைவர் ஜோஸ் வல்லுார், முன்னாள் எம்.பி., டி.என்.பிரதாபன் ஆகியோர் தான் காரணம்' என, மாவட்ட காங்., அலுவலகம் முன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில், திருச்சூர் மாவட்ட காங்., அலுவலகத்துக்கு, மாவட்ட காங்., செயலர் சஜீவன் குரியாச்சிரா வந்தார்.
அப்போது, ஜோஸ் வல்லுாருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சஜீவன் குரியாச்சிராவை, ஜோஸ் வல்லுாரின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சஜீவன் குரியாச்சிரா அளித்த புகாரின்படி, ஜோஸ் வல்லுார் உள்ளிட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.