ADDED : மார் 26, 2024 06:30 AM

துமகூரு; வேட்பாளர் அறிவிக்கப்பட்ட உடன் நடந்த பா.ஜ., - ம.ஜ.த., ஆலோசனை கூட்டத்தில், இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
'குடும்ப கட்சி' என்று ம.ஜ.த.,வை விமர்சித்து வந்த பா.ஜ.,வினர், லோக்சபா தேர்தலில் அக்கட்சியினருடன் கூட்டணி அமைத்து உள்ளனர். இதனால், இரு கட்சி தொண்டர்களிடையே ஒரு பகுதியினர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
ஆனாலும் கட்சி மேலிட முடிவால், முணுமுணுப்புடனே தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல தொகுதிகளில் தேர்தல் பணிகள் முறையாக நடக்கவில்லை.
உதாரணமாக துமகூரு தொகுதி பா.ஜ., சார்பில் சோமண்ணா போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி வியூகம் அமைப்பது தொடர்பாக, துருவகெரேயில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் இரு கட்சியினரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பா.ஜ.,வின் கொண்டாஜி விஸ்வநாத், சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததில் ம.ஜ.த.,வின் செயல்பாடு குறித்து விமர்சித்தார். இதை கேட்ட துருவகெரே ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா, “உங்கள் தோல்விக்கு நீங்களே தான் காரணம்,” என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
இரு கட்சி தொண்டர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ., வேட்பாளர் சோமண்ணா மற்றும் நிர்வாகிகள், கூட்டத்தினரை சமாதானப்படுத்தினர்.

